சென்னை: தமிழ்நாட்டில் கரோனா இரண்டாம் அலை தற்போது படிபடியாக குறைந்து வருகிறது. கரோனாவை தடுப்பூசியால் மட்டுமே முழுமையாக கட்டுக்குள் கொண்டு வர முடியும் என்பதால், மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என அரசு அறிவுறுத்திவருகிறது.
மேலும், பொதுமக்களிடையே தடுப்பூசி குறித்த விழிப்புணர்வுகளை அரசு அலுவலர்கள், மருத்துவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் செய்து வருகின்றனர். தடுப்பூசியை கண்டு தொடக்கத்தில் மக்கள் அச்சம் கொண்டனர். ஆனால் தற்போது, மிகுந்த ஆர்வத்துடன் செலுத்திக்கொள்கின்றனர்.
இதனிடையே தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, ஒன்றிய அரசிடம் தமிழ்நாடு அரசு வைத்த கோரிக்கையின் அடிப்படையில், தடுப்பூசிகளை ஒன்றிய அரசு ஒதுக்கிவருகிறது.
கோரிக்கை
தடுப்பூசி சரிவர கிடைக்கவில்லை என்பதால் பலர் மருத்துவமனை நிர்வாகத்திடமும், காவல் துறையினரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். இதனை போக்கும் பொருட்டு, தமிழ்நாட்டிற்கு கூடுதல் தடுப்பூசிகளை உடனடியாக வழங்கக்கோரி, ஒன்றிய அரசுக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கோரிக்கை வைத்தார்.
அதனடிப்படையில், தமிழ்நாட்டிற்கு தடுப்பூசிகளை ஒன்றிய அரசு வழங்கிவருகிறது. மக்களும் கரோனா தடுப்பூசியை ஆர்வமுடன் செலுத்திக் கொள்கின்றனர்.
வந்தடைந்த தடுப்பூசிகள்
இந்நிலையில், புனேவில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மூலம் 22 பார்சல்களில், 2 லட்சத்து 64 ஆயிரம் கோவீஷீல்ட் தடுப்பூசிகள், விமானம் மூலம் சென்னை வந்தடைந்தன.
இதனை மாநில மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அலுவலர்கள் பெற்றுக்கொண்டு, சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள தடுப்பூசி சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு சென்றனர்.
அதேபோல், 30 பார்சல்களில் வந்த, 3 லட்சத்து 60 ஆயிரம் கோவீஷீல்ட் தடுப்பூசிகள், சென்னை பெரியமேட்டில் உள்ள மத்திய மருந்து கிடங்கிற்க்கு கொண்டு செல்லப்பட்டது.
இதையும் படிங்க: ஒரு வாரம் முன்னதாக முடிவடைகிறது பட்ஜெட் கூட்டத்தொடர்!