சென்னை: ஐஐடி வளாகத்திலுள்ள நாய்களை முறையாக பராமரிக்கக்கோரி கால்நடைகளுக்கான இந்திய மக்கள் அமைப்பு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, பொறுப்புத் தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், சென்னையில் தெரு நாய்கள் மட்டுமல்லாமல் பல்வேறு கால்நடைகள் சாலைகளில் திரிவதாகவும், போக்குவரத்து மிகுந்த கடற்கரைச் சாலையிலும்; கால்நடைகள் கடந்து செல்வதைப் பார்க்க முடிவதாகவும் குறிப்பிட்டனர். மாநகராட்சிக்கு வெளியில்தான் கால்நடைகள் இருக்க வேண்டும் எனவும், நகருக்குள் இருப்பதைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் சென்னை மாநகராட்சிக்கு கேள்வி எழுப்பினர்.
இதற்கு மாநகராட்சி தரப்பில் அளித்த விளக்கத்தில், கால்நடைகளின் உரிமையாளர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டு, மீண்டும் சாலையில் விடமாட்டோம் என உத்தரவாதம் பெறப்பட்டு, கால்நடைகள் விடுவிக்கப்படுவதாகவும், மாநகராட்சி சட்டப்படி, பன்றிகளுக்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அப்போது நீதிபதிகள் சென்னை மாநகர திறந்தவெளி மிருகக்காட்சி சாலையா? என கேள்வி எழுப்பியதுடன், மாநகராட்சி பகுதியில் கால்நடைகளுக்கு தடைவிதிக்கும் விதிகள் ஏதும் இல்லை என்றால், அதற்கான உத்தரவை நீதிமன்றம் பிறப்பிக்கும் எனக் கூறி, வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கும் தள்ளிவைத்தனர்.
இதையும் படிங்க: வினோஜ் பி. செல்வத்தின் சர்ச்சைக்குரிய ட்வீட் வழக்கு - போலீஸாரின் பதிலுக்காக காத்திருக்கும் உயர் நீதிமன்றம்