சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் கழிவுகள் கொட்டப்படும் இடங்கள் மற்றும் அதை மறு சுழற்சி செய்யும் நடவடிக்கை உள்ளிட்ட பல விவகாரங்கள் குறித்து மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் அவருடன் ஆய்வு மேற்கொண்டனர்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய ராதாகிருஷ்ணன், தான் சுகாதாரத்துறை ஆணையராக இருந்தபோது நாள் ஒன்றுக்கு சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் இருந்து சுமார் 2 ஆயிரம் மெட்ரிக் டன் குப்பைகள் மட்டுமே சேகரிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். ஆனால், தற்போது அது 5 ஆயிரத்து 500 மெட்ரிக் டன் குப்பையாக அதிகரித்திருப்பதாக வேதனை தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய ராதாகிருஷ்ணன், முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மேயராக இருந்ததால், அவர் சென்னை மீது சிறப்பு கவனம் செலுத்தி வருவதாகவும், அதேபோல் பொதுமக்களும் நம்ம ஊரு நம்ம குப்பை" என்ற விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். மேலும் பொதுமக்கள் குப்பைகளை மக்கும் குப்பை மக்காத குப்பை என பிரித்து வழங்கி மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்ட அவர், ஏற்கனவே சேகரிக்கப்பட்டுள்ள குப்பைகளை அகற்றி குப்பை சேகரிக்கப்பட்ட இடங்களை பூங்காவாக மாற்ற பல ஆண்டுகள் தேவைப்படும் எனவும் குறிப்பிட்டார்.
அது மட்டுமின்றி சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் இருக்கும் கட்டிட கழிவுகளை காண்ட்ராக்டர்கள் சாலையில் கொட்டக்கூடாது என எச்சரிக்கை விடுத்த ஆணையர் ராதாகிருஷ்ணன், அதையும் மீறி கொட்டினால் காண்ட்ராக்டர்கள் மற்றும் உரிமையாளர்களுடைய இயந்திரம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யபட்டும் எனவும் கூறினார். அது மட்டுமின்றஇ அவர்கள் மீது சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்." எனவும் எச்சரிக்கை விடுத்தார்.
முன்னதாக சென்னை அடுத்த பெருங்குடி குப்பைக் கொட்டும் வளாகத்தில் செயல்பட்டு வரும் தேங்காய் ஓடுகள் மற்றும் தோட்டக் கழிவுகள் மற்றும் அதை மறுசுழற்சி செய்யும் இயந்திரத்தின் செயல்பாட்டினையும், அதனுடன் கட்டுமானம் மற்றும் கட்டட இடிபாட்டுக் கழிவுகளை பிரித்தெடுக்கும் நிலையத்தின் செயல்பாட்டினையும் ஆணையர் ராதாகிருஷ்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும், பெருங்குடி குப்பைக் கொட்டும் வளாகத்தில் சுமார் 34.02 இலட்சம் கன மீட்டர் அளவில் பல ஆண்டுகளாக குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. அதையும் ஆய்வு செய்த அவர், அந்த குப்பைகள் தற்சமயம் உயிரி அகழ்ந்தெடுத்தல் முறையில் (Bio Mining) களையப்பட்டு அவற்றிலிருந்து கல், மணல், இரும்பு, மரக்கட்டைகள், கண்ணாடி, ரப்பர் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை தனித்தனியாக பிரித்தெடுத்து மறுசுழற்சியும் செய்யும் பணியையும் பார்வையிட்டார். இந்த பணிக்காக ரூ.350.65 கோடி மதிப்பீட்டில் 11 உயிரி அகழ்ந்தெடுக்கும் மையங்கள் நடைபெற்று வரும் இந்த பணிகளை ஆய்வு செய்த ராதாகிருஷ்ணன். இத்திட்டப் பணிகளை குறிப்பிடப்பட்டுள்ள காலத்திற்குள் விரைந்து முடிக்க வேண்டுமென ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தினார்.