சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் 387 கிலோ மீட்டர் நீளமுடைய 471 பேருந்து தட சாலைகள் மற்றும் 5,270 கி.மீ. நீளமுடைய 34,640 உட்புறச் சாலைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. பேருந்து தட சாலைகள் மற்றும் உட்புறச் சாலைகளை மேம்படுத்தும் பணிகள் தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் உட்கட்டமைப்புத் திட்டம் சிங்கார சென்னை 2.0, நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் முதல் மற்றும் இரண்டாவது திட்டம் மூலம் மாநகராட்சி நிதி மற்றும் வெளி ஆதாரத் திட்டங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பில், "பெருநகர சென்னை மாநகராட்சியில் 2022 - 23 ஆம் ஆண்டில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் திருவொற்றியூர், மணலி, ராயபுரம், வளசரவாக்கம், அடையாறு மற்றும் சோழிங்கநல்லூர் ஆகிய மண்டலங்களில் ரூ.55.61 கோடி மதிப்பில் 414 உட்புறச் சாலைகள் மற்றும் 38 பேருந்து தட(BusRoute Roads) சாலைகள் அமைக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் உட்கட்டமைப்புத் திட்டத்தின் (Tamil Nadu Urban InfraStrucuture Finance TURIF 2022 - 23) கீழ் அனைத்து மண்டலங்களிலும் ரூ.29.71 கோடி மதிப்பில் 300 உட்புறச் சாலைகளில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது.
மேலும் பெருநகர சென்னை மாநகராட்சியில் 2022 - 23 ஆம் ஆண்டில் தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் உட்கட்டமைப்புத் திட்டத்தின் கீழ், ரூ.119.83 கோடி மதிப்பில் அனைத்து மண்டலங்களிலும் 1,012 உட்புறச் சாலைகள் மற்றும் 23 பேருந்து தட சாலைகள் என மொத்தம் 1,035 சாலைகள் அமைக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணாநகர் 6 ஆவது நிழற்சாலை, அண்ணாநகர் 3 ஆவது நிழற்சாலை, ஸ்டிபன்சன் சாலை, சியல்லம் கெனால் சாலை, பாந்தியன் சாலை, ருக்மணி லசுமிபதி சாலை, காசா மேஜர் சாலை, காமராஜர் சாலை, டாக்டர் அம்பேத்கர் கல்லூர் சாலை உள்ளிட்ட அனைத்து பகுதிகளில் சாலை அமைக்கும் பணி முடிக்கப்பட்டுள்ளது" என மாநகராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பொதுமக்கள் சிலர் கூறியதாவது, "சிங்கார சென்னை என்ற அழைக்கப்படும் சென்னை நகரில் ஒரே நேரத்தில் மின்சாரத் துறை மின் கேபில் புதைக்கும் பணி, குடிநீர் வாரியம் குழாய் புதைத்தல் பணி, மழை நீர் வடிகால் பணி, மெட்ரோ பணி என பல்வேறு துறைகளில் சென்னையில் சாலைகள் தோண்டி குண்டும் குழியாக மாறியுள்ளது. முக்கிய சாலைகளை மட்டும் சீர்மைத்தால் எப்படி? இதற்கு தீர்வு எப்போது" எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.