சென்னை: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று நடைபெற்றது. அப்போது, அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள கொள்கை விளக்கக் குறிப்பில், "அரசின் அணுகுமுறையின் காரணமாகத் தமிழ்நாட்டில் மே மாதத்தில் சுமார் 36 ஆயிரத்து 200 ஆக உயர்ந்த கரோனா தினசரி தொற்று தற்போது ஆயிரத்து 600-க்கும் கீழாகக் குறைந்துள்ளது.
இது மேலும் குறைய அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டுவருகின்றன. மே மாதத்தில் சிகிச்சை பெற்றுவந்த நோயாளிகளின் எண்ணிக்கை 3.13 லட்சமாக இருந்தது. தற்போது 18 ஆயிரத்திற்கும் கீழாகக் குறைந்துள்ளது. மாநிலத்தில் தற்போது, குணமடைந்தோர் விகிதம் சுமார் 98 விழுக்காடாகவும், இறப்பு விகிதம் 1.34 ஆகவும் குறைந்துள்ளது.
மேலும், தினசரி கரோனா தொற்று விகிதம் சுமார் 10 விழுக்காடாகக் குறைந்துள்ளது. தடுப்பூசி செலுத்தும் பணி தொடர்ந்து ஊக்கப்படுத்தப்பட்டுவருகிறது.
கரோனா தொற்று உறுதியாகும் பகுதிகளில் நோய்க் கட்டுப்பாடுகள், காய்ச்சல் கண்காணிப்பு, சோதனை மேற்கொள்வது, கரோனா பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிந்து அவர்களுக்குச் சிகிச்சை அளிப்பது, தடுப்பூசி போடுவது, கோவிட் சார்ந்த பழக்கங்களை ஊக்குவிப்பது போன்ற நடவடிக்கைகள் அரசால் எடுக்கப்பட்டுவருகின்றன. இதனால் மாநிலம் முழுவதும் தொற்று படிப்படியாகக் குறைந்து கட்டுக்குள் உள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : கரோனா மூன்றாம் அலையை எதிர்கொள்ள அரசு தயார்!