கரோனா வைரஸ் பெருந்தொற்று வேகமாக பரவிவரும் சூழலில், அதைத் தடுக்கும் விதமாக ஆளில்லா குட்டி விமானம் (ட்ரோன்) மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணியை சென்னை மாநகராட்சி கட்டடத்தில் ஆணையர் பிரகாஷ் தொடங்கிவைத்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறுகையில், "கரோனா அச்சுறுத்தல் காரணமாக மாநகராட்சி சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, கிருமி நாசினி தெளிக்கும் பணி தற்போது தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் 144 தடைக்கு பின் பெரும்பாலான இடங்களில் கூட்டம் குறைந்துள்ள காரணத்தால், இந்த பணியை நாங்கள் இப்போது முன்னெடுக்கிறோம்.
குறிப்பாக, மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள சந்தைகள், குடிசை மாற்று வாரிய கட்டடங்கள், நெரிசல் மிகுந்த வாழிடங்கள், வாகனங்கள் செல்ல முடியாத பகுதிகள் என தொற்று பரவும் அபாயம் நிறைந்த இடங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் சுகாதார ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பணிக்காக அண்ணா பல்கலைக்கழகத்தின் நேரடி கண்காணிப்பில் உருவாக்கப்பட்ட 4 டிரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன. முக்கியமான இடங்களில் இந்த மருந்து தெளிக்கும் பணி தொடங்கும்.
சென்னையில் 22 ஆயிரம் இல்லங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல் வெளி மாநிலத்தை சார்ந்த 2 ஆயிரம் பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. கரோனா அறிகுறிகள் காரணமாக வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களை தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு அவர்களின் உடல்நலன் குறித்து கேட்டறிந்து வருகிறார்கள். இதற்கான பணியில் 30 மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும், கட்டுப்பாட்டு அறைக்கு வரும் அழைப்புகளின் சந்தேகங்களை போக்க 10 மருத்துவர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சமைக்கப்பட்ட உணவுகள் ஆன்லைனில் விற்பனை செய்ய முழுவதும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய மளிகை பொருட்களை வீடுகளுக்கு டெலிவரி செய்ய எந்த தடையும் விதிக்கப்படவில்லை. பால், நாளிதழ் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் பல இடங்களுக்கு கொண்டுச் செல்வதில் எந்த தடையும் ஏற்படாமலிருக்க சென்னை மாநகராட்சி காவல் ஆணையரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்" என்றார்.
அண்ணா பல்கலைகழகம் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஆளில்லா குட்டி விமானம் 42 கிலோ எடை கொண்டது. பெட்ரோலில் இயங்கும் இந்த ட்ரோன் தொடர்ந்து 1.30 மணி நேரம் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது 8 நிமிடத்தில் ஒரு கி.மீ. வரையிலும் மருந்து தெளிக்கும் திறன் கொண்டது. அதேபோல் 3.5 லிட்டர் பெட்ரோலில் 16 லிட்டர் கிருமி நாசினியுடன், 100 மீட்டர் வரையிலும் பறக்கும் ஆற்றல் கொண்டுள்ளது.
இதையும் படிங்க : கரோனா: ஒரு மாத ஊதியத்தை நிதியாக வழங்கும் வைகோ!