தமிழ்நாட்டில் நிலவும் தற்போதைய கரோனா இரண்டாம் அலையில், தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருமளவில் அதிகரித்து வருகிறது. இந்தப் பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் விதமாக இன்று (மே.10) முதல் 14 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சில அத்தியாவசியப் பணிகள் தவிர மற்ற அனைத்துப் பணிகளுக்கும் இதில் தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியமற்ற பிற பணியாளர்கள் வீட்டிலிருந்து பணியாற்றவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
முக்கிய அரசு அலுவலகங்கள் மட்டுமே தற்போது செயல்பட்டு வரும் நிலையில், ஏராளமான மக்கள் சென்ற ஆண்டைப் போலவே மீண்டும் வேலை இல்லாத சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில், கடந்த இரண்டு நாள்களில் ஏராளமான மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளது தெரிய வந்துள்ளது.
கடந்த இரண்டு நாள்களில் தமிழ்நாடு போக்குவரத்துத் துறை சார்பில் சிறப்புப் பேருந்துகள் இதற்காக இயக்கப்பட்டன. எட்டு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் மூன்றாயிரத்து 266 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்றும், ஒட்டுமொத்தமாக இந்த இரண்டு நாள்களில் ஒன்பதாயிரத்து 636 பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தமிழ்நாடு போக்குவரத்துத் துறை முன்னதாக தெரிவித்திருந்தது.
இந்நிலையில் மே 8, 9 ஆகிய இரண்டு நாள்களில் மட்டும் சென்னையிலிருந்து நான்காயிரத்து 575 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளதாகவும், இரண்டு லட்சத்து ஐந்தாயிரத்து 875 பயணிகள் இப்பேருந்துகளில் பயணித்துள்ளதாகவும் போக்குவரத்து துறை தற்போது தெரிவித்துள்ளது. தவிர தனியார் பேருந்துகளிலும் பெருமளவு மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.