சென்னை: கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன் மற்றும் செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில், இன்று (மார்ச் 10) சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் துறை சார்ந்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் 2021 - 2022ஆம் ஆண்டு மானியக் கோரிக்கை அறிவிப்புகள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், வருகிற 2023 - 2024ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையின்போது வெளியிட முன்மொழியப்படும் அறிவிப்புகள் குறித்தும், மேலும் கடந்த 2022 மே 7 முதல் 2023 பிப்ரவரி 28 வரை கூட்டுறவுத் துறையின் சாதனைகள் விவரம் பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பெரிய கருப்பன், “திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, 2022 - 2023 வரை 16 லட்சத்து 46 ஆயிரம் விவசாயிகளுக்கு கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு 12 ஆயிரத்து 679 கோடி ரூபாய் விவசாயிகளுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. மேலும் விவசாயிகளுக்கு 5,013 கோடி ரூபாய் நகைக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் 20 ஆயிரத்து 300 கோடி ரூபாய் அளவில் கூட்டுறவுத் துறை சார்பில் கடன் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
தனியார் வங்கிகளுக்கு இணையாக கூட்டுறவுச் சங்கங்களின் கட்டமைப்பு, உள்கட்டமைப்பு மற்றும் தகவல் தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். கணவனை இழந்துத் தனியாக வாழும் பெண்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்குத் தேவையான கடன் உதவிகளை வழங்கி வருகிறோம். நவீன சாதனங்களை பயன்படுத்தி, எல்லா விதமான சேவைகளை செய்யும் வகையில் கூட்டுறவு வங்கிகள் மேம்படுத்தப்பட உள்ளது.
பல இடங்களில் வாடகை கட்டடங்களில் கூட்டுறவு வங்கி கிளைகள் இயங்கி வருவதால், நிதி வசதியைப் பொறுத்து படிப்படியாக அதற்கான நடவடிக்கை மேம்படுத்தப்படும். கிராமப் புறங்களில் 30 சதவீதம் வரை உரமாகவே விவசாயிகளுக்கு வழங்குவதற்கான வாய்ப்புகள் வந்துள்ளது. ஆகவே எந்த காலத்தில் என்ன உரங்கள் தேவைப்படுகிறது என்பதற்கு ஏற்ப, கூட்டுறவு சங்கங்களின் மூலமாக கிராமப் புறங்களில் உரங்கள் வழங்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
கூட்டுறவு சங்கம் தேர்தல் முறையாக நடக்க வேண்டும் என்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவுறுத்தலின்படி, தேர்தலுக்காக முறைப்படுத்துவதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. எனவே இந்த பணிகள் முடிந்த பிறகு, தேர்தல் நடத்துவதற்கான பணிகள் தொடங்கும். இதில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பொறுப்புகளுக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளது” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஒரிஜினல் தளபதிக்கே டஃப் கொடுக்கும் ஒன்றிய தளபதி: பட்டியல் போடும் ஹைடெக் எம்எல்ஏ; பின்னணி என்ன?