சென்னை: கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழ் திரையுலகில் கரோனாவிற்கு பிறகு தேங்கி கிடந்த ஏராளமான படங்கள் தொடர்ந்து ஒன்றின் பின் ஒன்றாக வெளியாகி வருகின்றன. அந்த வகையில் இந்த வாரம் 5 படங்கள் ரிலீஸ் ஆகியுள்ளன. 4 தமிழ் படங்கள் மற்றும் ஒரு டப்பிங் திரைப்படம் என ஒரு வாரத்தில் மட்டும் மொத்தம் 5 படங்கள் வெளியாகி உள்ளது. மணிகண்டனின் குட் நைட், ஐஸ்வர்யா ராஜேஷின் ஃபர்ஹானா, சாந்தனுவின் இராவண கோட்டம், நாக சைதன்யாவின் கஸ்டடி மற்றும் ஸ்ரேயா சரணின் மியூசிக் ஸ்கூல் ஆகிய படங்கள் விடுமுறை காலங்களில் இரசிகர்களுக்கு விருந்தாக படைக்கப்பட்டுள்ளது.
'குட் நைட்'
அறிமுக இயக்குநர் விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் 'ஜெய் பீம்' பட புகழ் மணிகண்டன் நடிப்பில் 'குட் நைட்' திரைப்படம் உருவாகி உள்ளது. இந்த படத்தில் மணிகண்டனுக்கு ஜோடியாக நடிகை மீதா ரகுநாத் நடித்திருக்கிறார். இவர்களுடன் ரமேஷ் திலக், இயக்குநரும், நடிகருமான பாலாஜி சக்திவேல், பக்ஸ் என்ற பகவதி பெருமாள், ரேச்சல் ரெபாக்கா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ரொமான்டிக் காமெடி ஜானரில் தயாராகி இருக்கும் இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். தூக்கத்தின் போது ஏற்படும் குறட்டையை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த படத்தில் தூங்கும் போது ஒருவர் விடும் குறட்டை எப்படி மற்றவர்களை பாதிக்கிறது என்பதைக் மையப்படுத்தி நகைச்சுவையாக எடுக்கப்பட்டு உள்ளது.
'ஃபர்ஹானா'
ஒரு நாள் கூத்து, மான்ஸ்டர் போன்ற படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் 'ஃபர்ஹானா' திரைப்படம் உருவாகி உள்ளது. இதில் ஜித்தன் ரமேஷ், செல்வராகவன், ஐஸ்வர்யா தத்தா, அனுமோல் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் திரைக்கு வருகிறது.
'இராவண கோட்டம்'
'மதயானைக் கூட்டம்' படத்துக்குப் பிறகு விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் 'இராவண கோட்டம்' திரைப்படம் உருவாகி உள்ளது. சாந்தனு பாக்யராஜ் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக கயல் ஆனந்தி நடித்துள்ளார். முற்றிலும் வித்தியாசமான கதைக்களத்துடன் பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தில் நடக்கும் கதையாக எடுக்கப்பட்டுள்ள இப்படம் பல சர்ச்சைகளுக்கு வித்திடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
'கஸ்டடி'
இதைத் தொடர்ந்து இயக்குநர் வெங்கட் பிரபுவும், நடிகர் நாக சைதன்யாவும் முதல் முறையாக இணைந்திருக்க கூடியத் திரைப்படம் கஸ்டடி ஆகும். தமிழ்-தெலுங்கு என இரு மொழிகளில், மிகப்பெரிய தயாரிப்புச் செலவில் இத்திரைப்படம் உருவாகி உள்ளது. நாக சைதன்யா கதையின் நாயகனாகவும் க்ரித்தி ஷெட்டி கதாநாயகியாகவும் நடிக்க, நடிகர் அரவிந்த் சுவாமி வில்லனாக நடித்துள்ளார். இசை மேதைகளான தந்தை-மகன் 'இசைஞானி' இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இருவரும் இணைந்து இப்படத்திற்கு இசையமைத்து உள்ளனர். இது ரசிகர்கள் மத்தியில் கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்ப்படுத்தியுள்ளது. இந்த படம் இன்று தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது.
'மியூசிக் ஸ்கூல்'
பாபாராவ் பிய்யாலா இயக்கத்தில் ஸ்ரேயா சரண் நடிப்பில் உருவாகி உள்ள மியூசிக் ஸ்கூல். இந்த திரைப்படம் தெலுங்கு, இந்தி மற்றும் தமிழ் மொழிகளில் இன்று வெளியாகிறது. இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இது தவிர ஓ.டி.டி. வெளியீடு என்று எடுத்துக்கொண்டால் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் கடந்த மாதம் 14ஆம் தேதி திரைக்கு வந்த சொப்பன சுந்தரி திரைப்படம் இன்று ஓ.டி.டி(Hotstar) தளத்தில் வெளியாகியுள்ளது. ஒரே நாளில் ஐஸ்வர்யா ராஜேஷின் ஒரு திரைப்படம் திரையரங்குகளிலும் மற்றொரு திரைப்படம் ஓடிடியிலும் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நான் என்ன எழுதினாலும் அதில் அரசியல் வந்துவிடுகிறது - இயக்குநர் ராஜூ முருகன்!