சென்னை: தலைமை செயலகத்தில் இன்று (ஆகஸ்ட். 11) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறும் பயனாளிகளுக்கான தகுதிகள், நிபந்தனைகள் வெளியிடப்பட்டன. இதைத் தொடர்ந்து, நியாயவிலை கடைகள் மூலம் விண்ணப்பம் அளித்து, இரண்டு கட்டமாக விண்ணப்பப் பதிவு முகாம்கள் நடத்த முடிவெடுக்கப்பட்டது.
அதன் பிறகு, ஆலோசனை செய்து, தமிழகத்தில் மூன்று கட்டங்களாக விண்ணப்பதிவு நடைபெறும் என அண்மையில் தமிழக அரசு அறிவித்தது. இதன் தொடர்ச்சியாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜூலை மாதம் 24ஆம் தேதி அன்று தருமபுரி மாவட்டம் தொப்பூரில் உள்ள அரசுப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்பங்கள் பதிவைத் தொடங்கி வைத்தார்.
இதனைத்தொடர்ந்து, இந்த பணிகள் தமிழகம் முழுவது முழுவீச்சாக நடைபெற்று வருகிறது. மேலும், தமிழகத்தில் பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை' திட்டத்தை அண்ணா பிறந்த நாளான செப்.15-ம் தேதி, அவர் பிறந்த ஊரான காஞ்சிபுரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலின் போது அளித்த வாக்குறுதிப்படி, குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம், இந்தாண்டு 2023-24 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு இருந்தது. இத்திட்டத்துக்கு ரூ.7 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டதுடன், செப்.15-ம் தேதி அண்ணா பிறந்த தினத்தன்று திட்டம் தொடங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த விண்ணப்ப பணியில், ஜூலை 24 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 4-ஆம் தேதி வரை நடைபெற்ற முதலாம் கட்ட சிறப்பு முகாமில் 88.34 இலட்சம் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டன. அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 5-ஆம் தேதி முதல் தொடங்கப்பட்ட இரண்டாம் கட்ட முகாம் ஆக்ஸ்ட் 16-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் தற்போது வரை 59.86 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
இந்த இரு முகாம்களிலும் விடுபட்டவர்களிடம் விண்ணப்பங்களைப் பெற ஆகஸ்ட் 19, 20 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு சுமார் 2 கோடி விண்ணப்பங்கள் பதிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.சுதந்திர தினம், கிராம சபைக் கூட்டங்கள் காரணமாக கலைஞா் மகளிா் உரிமைத் தொகைக்கான முகாம்கள் வரும் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நடைபெறாது என்றும், அதற்குப் பதிலாக ஆகஸ்ட் 19 மற்றும் 20-ஆம் தேதிகளில் நடைபெறும் முகாம்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விண்ணப்பதிவு பணி, பயனாளிகளை தேர்வு செய்தல் என திட்டத்தை செயல்படுத்துவது குறித்தும், இந்தப் பணிகளின் அடிப்படையில் பெறப்பட்டுள்ள கருத்துக்கள் மீது எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தகுதியுள்ள ஒரு மகளிர் கூட விடுபடாத வகையில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு சுமார் 2 கோடி விண்ணப்பங்கள் பதிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், ஒரு கோடி பேர் மட்டும் பயனாளிகளாக சேர்க்கப்பட உள்ளதால், பாதிக்கும் மேலான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட வாய்ப்பு உள்ளது. திமுக தேர்தல் வாக்குறுதிப்படி, குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம், இந்தாண்டு 2023-24 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அனைத்து மகளிருக்கும் இல்லை என்று சொன்னது, சில மகளிர்கள் இடைய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் விண்ணப்பம் பதிவு செய்த மகளிர் பலர் அவர்களுக்கு கிடைக்குமா கிடைக்காதா என்ற குழப்பத்தில் உள்ளனர்.
இதையும் படிங்க: தமிழகத்தில் பாஜக எதிர்கட்சியா? - நகைச்சுவை என்கிறார் ஸ்டாலின்!