சென்னை: மத்திய சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருப்பவர் ரஞ்சன்குமார். இவர் கே.எஸ்.அழகிரியின் வலதுகரமாக செயல்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் பொன்னேரி, எழும்பூர் ஆகிய தனித்தொகுதிகளில் போட்டியிட இவர் விருப்பமனு அளித்து இருந்தார்.
இந்நிலையில் சென்னையைச் சேர்ந்த சமியுஅல்லா என்பவரிடம் ரஞ்சன் குமார் 35 லட்சம் ரூபாய் பணம் மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து அவர் மீது எழும்பூர் விரைவு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்தப் பண மோசடி வழக்கு குறித்து எழும்பூர் விரைவு நீதிமன்றம் விசாரணை நடத்தி வந்தது. ஆனால், இந்த வழக்கில் ஆஜராகாமல் நீதிமன்றத்தை தொடர்ந்து ரஞ்சன்குமார் புறக்கணித்து வந்தார்.
இந்நிலையில், கடந்த 10ஆம் தேதி அன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோதும் ரஞ்சன்குமார் ஆஜராகவில்லை. இதனால் அதிருப்தியடைந்த விரைவு நீதிமன்றம், அவரைக் கைது செய்து ஆஜர்படுத்துமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டது. மேலும், ரஞ்சன்குமாரை பிடிக்க அமைந்தகரை காவல் துறையினர் தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று இரவு (மார்ச். 15) பூந்தமல்லி அருகே வைத்து ரஞ்சன்குமாரை அமைந்தகரை காவல் துறையினர் கைது செய்தனர். பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ரஞ்சன்குமாருக்கு எதிராக சென்னையில் உள்ள காவல் நிலையங்களில் ஏற்கனவே வழக்குகள் உள்ளன.
இதில், அடையாறு, சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ள டாக்டர் நரசிம்ம ரெட்டியின் கொலை வழக்கும் அடக்கம். இதேபோல் வேலைவாய்ப்பு மோசடி உள்பட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சிசிடிவி காட்சி: கடலூர் துறைமுகப் பகுதியில் மாமியார், மனைவி படுகொலை