துக்ளக் பத்திரிகையின் 50ஆவது ஆண்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், 1971ஆம் ஆண்டு சேலத்தில் தந்தை பெரியார் தலைமையில் நடைபெற்ற பேரணியில் இந்துக் கடவுள்கள் ராமர், சீதை ஆகியோரின் படங்களை அவமரியாதை செய்யும் விதமாக செருப்பு மாலை அணிவித்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது என்றார்.
இது பெரியாரிய ஆதரவாளர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ரஜினி முற்றிலும் பொய்யான தகவலைக் கூறி கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் மத்தியில் பெரியார் குறித்த தவறான புரிதலை ஏற்படுத்தியுள்ளார் என்றும் அவர்கள் குற்றஞ்சாட்டினர். பல்வேறு இடங்களிலுள்ள பெரியாரிய ஆதரவாளர்களும் பெரியாரிய அமைப்புகளும் ரஜினிகாந்த்துக்கு எதிராகக் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, ரஜினிகாந்த் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திராவிடர் விடுதலைக் கழகத்தின் செயலாளர் உமாபதி, "நடிகர் ரஜினிகாந்த் பெரியார் பற்றிய தவறான கருத்தை மக்கள் மத்தியில் பேசியிருக்கிறார். தொடர்ச்சியாக பிஜேபியின் குரலாக அவர் ஒலித்துக் கொண்டிருக்கிறார். இது தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் எங்கள் கழகம் சார்பாக புகாரளித்துவருகிறோம். ரஜினி அந்தக் கருத்தை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்; இல்லை என்றால் ரஜினியின் வீட்டை முற்றுகையிட்டு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் போராட்டம் நடத்துவோம்.
திருவல்லிக்கேணி ஆய்வாளர் மோகன்தாஸிடம் புகார் கொடுத்து இருக்கிறோம். இரு பிரிவினருக்கிடையே வன்முறையைத் தூண்டும் விதத்தில் பேசுதல் (பிரிவு 153A), தேசிய தலைவர்கள் மீது திட்டமிட்டு வெறுப்பு பிரசாரத்தில் ஈடுபடுதல் (பிரிவு 504, 505) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யவேண்டும். இது தொடர்பாக தமிழ்நாடு அரசும் காவல்துறையும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பெரியார் குறித்து அவதூறாகப் பேசிய ரஜினி மீது புகார்