சென்னை: மாநில பாடத்திட்டத்தில் 2019-20 கல்வி ஆண்டில் 9 வகுப்பு படித்த மாணவர்களுக்கு மதிப்பெண்கள் எவ்வாறு வழங்க வேண்டும் என பள்ளிக்கல்வி துறை ஆணையர் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாடு பாடத்திட்டத்தில் 2020-21 கல்வியாண்டில் படித்த மாணவர்களுக்கு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைத்து மாணவர்களும் தேர்ச்சி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழில் தேர்ச்சி மட்டுமே என குறிப்பிட்டு வழங்கப்படுவதால், பலர் உயர்கல்வியில் சேர்வதில் சிக்கல் ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து, அந்த மாணவர்கள் ஒன்பதாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் உயர்கல்வி சேர்க்கை நடத்த வேண்டும் என பள்ளிக்கல்வி துறை ஆணையர் நந்தகுமார் அறிவித்தார். அதேபோல் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதால், பாலிடெக்னிக் கல்லூரி, தொழிற்பயிற்சி நிறுவனங்கள் உள்ளிட்ட படிப்புகளில் சேருவதற்கு ஒன்பதாம் வகுப்பில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் கணக்கில் கொள்ளப்படும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்திருந்தார்.
இது குறித்து பள்ளிக் கல்வித் துறை ஆணையர் நந்தகுமார், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில், பள்ளிக் கல்வியில் பத்தாம் வகுப்பு முடித்து மேல்நிலைக்கல்வி படிப்பதற்கும், பாலிடெக்னிக், தொழிற்பயிற்சி நிறுவனங்கள், பிற மேல்படிப்புகளில் சேருவதற்கு பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் அவசியம்.
இந்த நிலையில், 2021-22 ஆம் கல்வியாண்டில் பதினோராம் வகுப்பில் சேர உள்ள மாணவர்களுக்கு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வும், 2019-20ம் கல்வி ஆண்டில் ஒன்பதாம் வகுப்பு முழு ஆண்டு தேர்வு நடைபெறவில்லை. எனவே 11ஆம் வகுப்பு மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கைக்காக ஒன்பதாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் அளிக்க வழி காட்டு நெறி முறைகள் வெளியிடப்படுகின்றன.
2019 20 ஆம் கல்வி ஆண்டில் ஒன்பதாம் வகுப்பு பயின்ற மாணவர்கள் காலாண்டு மற்றும் அரையாண்டு ஆகிய இரண்டு தேர்வுகளில் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், எந்தத் தேர்வில் அவர்கள் அதிகப்படியான மதிப்பெண்கள் பெற்றுள்ளார் அந்த மதிப்பெண்ணை கணக்கில் எடுத்துக்கொள்ளலாம். காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வுகள் இரண்டிலும் கலந்து கொண்டு எந்தப் பாடத்தில் தேர்ச்சி பெறவில்லையோ அந்தப் படத்திற்கு குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் 35 வழங்கலாம்.
காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகள் இரண்டிற்கும் வருகை புரியாத மாணவர்களுக்கு குறைந்தபட்ச மதிப்பெண் 35 வழங்கலாம். அதேபோல் தேர்வுகளில் பங்கு பெற்று ஏதேனும் ஒன்றில் மட்டும் தேர்ச்சி பெற்றிருந்தால் அந்த மதிப்பெண்களை கணக்கில் எடுத்துக்கொள்ளலாம். இந்த வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றி மதிப்பெண் பட்டியலை வழங்கிட வேண்டும். அதனடிப்படையில் பதினோராம் வகுப்பு மாணவர் சேர்க்கை நடத்திட வேண்டும்.
மேலும் 2020 21 கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு பயின்ற அனைத்து மாணவர்களுக்கும் அரசு உத்தரவின்படி பத்தாம் வகுப்பிற்கான தேர்ச்சி சான்றிதழ் அரசு தேர்வுகள் இயக்ககத்தில் பின்னர் வழங்கப்படும் எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: மரியாதை நிமித்தமாக ஓபிஎஸ்யைச் சந்தித்த முக்கிய நிர்வாகிகள்!