சென்னை: சென்னையில் அடுக்குமாடி கட்டடங்களுக்கு உள்கட்டமைப்பு (Infrastructure Development Charges) கட்டண உயர்வு செய்யப்பட்டுள்ளது.
உள்கட்டமைப்புக் கட்டணத்தில் ரூ.20 அதிகரிக்கப்பட்டுள்ளது
தற்போது உள்கட்டமைப்பு கட்டணம் சதுர மீட்டருக்கு ரூ.198 ஆக உள்ளதை, சிஎம்டிஏ ரூ.218 ஆக உயர்த்தியுள்ளது. அதாவது ஒரு சதுர மீட்டருக்கு ரூ.20 அதிகரிக்கப்பட்டு புதிய கட்டணமாக வசூலிக்கப்பட உள்ளது. இது குறித்து சிஎம்டிஏ உறுப்பினர்-செயலாளர் அன்சுல் மிஸ்ரா பிறப்பித்த உத்தரவின்படி, ”உள்கட்டமைப்பு கட்டண விகிதம் சதுர மீட்டருக்கு ரூ.218 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. புதிய விகிதம் ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும். சிஎம்டிஏ ஒவ்வொரு நிதியாண்டிலும் ஐடிசியை(உள்கட்டமைப்புக் கட்டணம்) திருத்தும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், சென்னை பெருநகர நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கட்டணத்தை அதிகரிக்க திட்டமிடல் ஆணையத்திடம் கோரியதை அடுத்து இந்தத் திருத்தம் செய்யப்பட்டது. “திட்டமிடல் அனுமதிக்கு விண்ணப்பிக்கும் போது கட்டட உரிமையாளர்களிடமிருந்து உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மேலும், இந்தத் திருத்தம் சென்னை பெருநகரப் பகுதி முழுவதும் பொருந்தும். புதிய திருத்தம் 2022-23 நிதியாண்டுக்கானது” என்று சிஎம்டிஏ வட்டாரங்கள் தெரிவித்தன.
கட்டணத்தை செலுத்தாவிட்டால் தண்ணீர் இணைப்புகள் கிடையாது
நீர் மற்றும் கழிவுநீர் இணைப்புகளை வழங்குவதற்காகக் கட்டட உரிமையாளர்களிடமிருந்து வசூலிக்கப்படும் கட்டணம் மெட்ரோ வாட்டரின் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்படும் என்று அலுவலர் கூறினார்.
கட்டணத்தைச் செலுத்தத் தவறிய கட்டட உரிமையாளர்கள் தண்ணீர் மற்றும் கழிவுநீர் இணைப்புகளைப் பெறமாட்டார்கள். 2021-22 நிதியாண்டில், உள்கட்டமைப்புக் கட்டணம் ஒரு சதுர மீட்டருக்கு ரூ.198ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2020-21 நிதியாண்டில், இந்தக் கட்டணம் ஒரு சதுர மீட்டருக்கு ரூ.180ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து அகில இந்திய கட்டுனர் சங்க (தமிழ்நாடு) மாநில பொருளாளர் எஸ்.ராம பிரபு கூறுகையில், "சிஎம்டிஏ இந்தக் கட்டணத்தை ஒவ்வொரு ஆண்டும் 10 விழுக்காடு உயர்த்தும். இருப்பினும் கரோனா பேரிடர் காலத்தை உணர்ந்து இந்த ஆண்டுக்கான கட்டணத்தை குறைத்தோ அல்லது தவிர்த்திருக்கவோ முடியும். ஏனெனில் கூடுதல் கட்டணங்களின் சுமை நுகர்வோர் மீது மட்டுமே மாற்றப்படும்,'' என்றார்.