சென்னை: வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. சென்னையில் மழை வெள்ளம் அதிகம் பாதித்த இடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். திரு.வி.க. நகர் மண்டல அலுவலகத்தில் பொதுமக்களுக்கு விலையில்லா கொசுவலை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து, ஓட்டேரி நல்லா கால்வாய், ஸ்டீபன்சன் சாலை, 70 அடி சாலை, பல்லவன் சாலை, வீனஸ் நகர், கொளத்தூர் உள்ளிட்டப் பகுதிகளில் நடைபெறும் சீரமைப்புப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். அப்போது பணிகளை துரிதமாக முடிக்க வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும் சென்னையில் பல இடங்களில் மழைநீர் தேங்காமல் நடவடிக்கை எடுத்ததற்காக மேயர் பிரியா, ஆணையர் உள்பட அலுவலர்களுக்குப் பாராட்டு தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 'சென்னையில் எவ்வளவு பெரிய மழை பெய்தாலும் மாநகராட்சியும், பொதுப்பணித்துறையும் இதர அரசு துறைகளும் ஒன்றிணைந்து முன் ஏற்பாடுகளை செய்யத் தயாராக உள்ளனர். மேலும் அரசின் மழைக்கால நடவடிக்கைகள் குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தாலும் பொதுமக்களின் பாராட்டே போதும்' என்றார்.
கனமழை பாதித்த மயிலாடுதுறை, சீர்காழி, கடலூர் உள்ளிட்டப்பகுதிகளை நாளை நேரில் ஆய்வு செய்ய உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: காளிகாம்பாள் கோயிலில் ஹன்சிகா; இயக்குநருடன் சாமி தரிசனம்!