சென்னை: தமிழ்நாட்டில் ஓராண்டில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும் என திமுக அரசு அறிவித்தது. அறிவித்த ஆறே மாதங்களில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கும் மின் இணைப்புகள் வழங்கப்பட்டன. அதைத் தொடர்ந்து, 2022-2023ஆம் ஆண்டு எரிசக்தித் துறை மானியக் கோரிக்கையில், இந்த நிதியாண்டிலும் 50,000 விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி, கடந்த நவம்பர் மாதம் 11ஆம் தேதி கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் நடைபெற்ற விழாவில், இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டு, அன்றைய தினமே 20,000 விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்குவதற்கான ஆணைகளும் வழங்கப்பட்டன.
மேலும், இத்திட்டம் 100 நாட்களுக்குள் முடிக்கப்படும் என்றும்; அறிவிக்கப்பட்ட நிலையில், திட்டம் தொடங்கிய 61 நாட்களிலேயே 50,000 விவசாயிகளுக்கும் இலவச மின்சாரம் வழங்கப்பட்டுவிட்டதாகத் தெரிகிறது. இந்த நிலையில், இத்திட்டத்தின் கடைசி ஐந்து பயனாளிகளுக்கு மின் இணைப்புக்கான ஆணைகள் இன்று(ஜன.11) வழங்கப்பட்டன. சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இத்திட்டத்தின் 50,000-வது பயனாளி உள்பட 5 நபர்களுக்கு மின் இணைப்புக்கான ஆணைகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, எரிசக்தித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ரமேஷ் சந்த் மீனா, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராஜேஷ் லக்கானி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: மின்சார வாரியத்தில் ஆட்குறைப்பு நடவடிக்கையா? - ராமதாஸ் கண்டனம்