சென்னை: ஆர்கே நகரில் திமுக தேர்தல் பணிமனையைத் திறந்து வைத்த அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா, செயல்வீரர்கள் கூட்டத்தில் உரையாற்றினார்.
அந்த உரையில், பாஜகதான் மூன்றாவது அணியாக கமல்ஹாசனை உருவாகியுள்ளது. அந்த அணியால் திமுகவிற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது எனக் குறிப்பிட்டார். இந்தியாவிலேயே கட்சியிலும், ஆட்சியிலும் அனுபவம் பெற்ற ஒரே தலைவர் ஸ்டாலின் எனவும் ஆ.ராசா புகழாரம் சூட்டினார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், "சட்டப்படியான முயற்சிகளைத் தவிர திமுக எவ்விதமான அரசியல் அழுத்தத்தையும் ஜெயலலிதாவுக்கு தரவில்லை. ஜெயலிதாவை சிறைக்கு அனுப்ப வேண்டும் என வலியுறுத்தி பாமகவின் வழக்கறிஞர் பாலு, அக்கட்சி தலைவர் ஜிகே மணி ஆகியோர் பெங்களூர் முதலமைச்சர் சித்தராமையாவை சந்தித்து அழுத்தம் கொடுத்தார்கள்.
அவர்களை அருகில் வைத்துக்கொண்டு திமுகவை விமர்சிப்பது முதலமைச்சர் பழனிசாமிக்கு அழகல்ல. அழகான எந்தக் காரியத்தையும் அவர் செய்தது இல்லை. அதனால் அது ஆச்சரியமல்ல. பொய் புரட்டு எதையாவது சொல்லி ஆட்சிக்கு வர வேண்டும் என அவர் நினைக்கிறார். பாமக இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?" எனக் கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர், "ஆர்.கே நகரில் வெறும் இருபது ரூபாய் நோட்டைக் கொடுத்து ஓட்டு வாங்கி மக்களை ஏமாற்றியவர்கள், இனி அந்தத் தொகுதி பக்கம் வரமுடியாத நிலை உள்ளது. பல்வேறு ஊர்களில் பரப்புரை செய்கிறேன். செல்லுமிடமெல்லாம் தமிழ்நாட்டு மக்கள் ஆட்சி மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள். நிச்சயம் 234 தொகுதிகளில் திமுகதான் வெல்லும்" என்றார்.
இதையும் படிங்க:முதலமைச்சர் தொடர்ந்த அவதூறு வழக்கில் ஸ்டாலின் நேரில் ஆஜராக சம்மன்