சென்னை: தமிழ்நாட்டில் கடந்த மே 7ஆம் தேதி புதிய அரசு பதவி ஏற்றபோது கரோனா தொற்றுப் பரவல் தொடர்ச்சியாக அதிகரித்தது. கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நாள் ஒன்றிற்கு 36 ஆயிரத்தைக் கடந்தது.
அதைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் தளர்வுகளுடன் மே 10ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இருப்பினும், கரோனா தாக்கம் குறையாத நிலையில், முழு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தும்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
அதன்படி மே 24ஆம் தேதி முதல் ஜூன் 7ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பின்னர் பொதுமக்களின் நலன் கருதி சில தளர்வுகளை தமிழ்நாடு அரசு அறிவித்து வருகிறது.
நடைமுறையில் உள்ள ஊரடங்கு
குறிப்பாக கோவை, நீலகிரி, திருப்பூர், சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் கரோனா பாதிப்பு அதிகளவில் இருந்ததன் காரணமாக, அந்த 11 மாவட்டங்களைத் தவிர்த்து, மற்ற 23 மாவட்டங்களிலும் ஒரு சில தளர்வுகளுடனும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளுடனும் ஜூலை 5ஆம் தேதி வரை 6வது முறையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது.
ஜூலை 5ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், 7ஆவது முறையாக ஊரடங்கு நீட்டிப்பது தொடர்பாகவும், அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாகவும், எந்தெந்த மாவட்டங்களுக்கு கூடுதலாக தளர்வுகள் வழங்கலாம்? என்பது தொடர்பாகவும் சென்னை தலைமைச் செயலகத்தில் சுகாதாரத்துறை அலுவலர்கள், தமிழ்நாடு அரசின் உயர் அலுவலர்களுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.
கடந்த சில நாள்களில் தொற்று எண்ணிக்கை அதிகரித்துவரும் ஒரு சில மாவட்டங்களில் மட்டும் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
கூடுதல் தளர்வுகளுக்கான வாய்ப்புகள்
- 11 மாவட்டங்களில் சில கட்டுப்பாடுகளை தளர்த்தி தளர்வுகள் வழங்க வாய்ப்பு.
- பாதிப்பு குறைந்த மாவட்டங்களில் கடைகள் செயல்படும் நேரம் அதிகரித்து அனுமதிக்க வாய்ப்பு.
- 11 மாவட்டங்களில் பொது போக்குவரத்து சேவை தொடங்க சூழல் ஏற்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் முடிவு.
- திருமணம், இறப்பு நிகழ்வுகளில் உறவினர்கள் பங்கேற்பதில் உள்ள எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு.
- 11 மாவட்டங்களில் தொற்று குறைந்துள்ள மாவட்டங்களில் மட்டும் டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க வாய்ப்பு.
- பாதிப்பு குறைவாக உள்ள 3ஆம் வகை மாவட்டங்களில் உணவகங்களில் 50 விழுக்காடு இருக்கைகளில் பொதுமக்கள் அமர்ந்து உணவு சாப்பிட அனுமதிக்க வாய்ப்பு.
- திரையரங்குகள் திறக்க அனுமதியளிக்க வாய்ப்பு.
- அனைத்து மாவட்டங்களிலும் கடைகள் செயல்படும் நேரம் அதிகரிக்க வாய்ப்பு.
இவையனைத்தும், நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, செயல்படுத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவின் அடிப்படையில், தமிழ்நாட்டில் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பான அறிவிப்பு இன்று மாலை அல்லது நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: 11 மாவட்டங்களில் போக்குவரத்து அனுமதிக்கப்படுமா? மு.க. ஸ்டாலின் ஆலோசனை!