சென்னை மாநகராட்சி, அம்பத்தூர் மண்டலத்தில் தேசிய நகர்ப்புற வாழ்வாதாரத் திட்டத்தின்கீழ் 1457 தூய்மைப் பணியாளர்கள் பணியாற்றிவருகிறார்கள்.
கடந்த எட்டு ஆண்டுகளுக்கு மேலாக, இவர்கள் பேரிடர், தொற்று காலத்தில் தங்களது உயிரைப் பணயம்வைத்து பணியாற்றிவந்தனர். இவர்களுக்குத் தினமும் 391 ரூபாய் ஊதியம் வழங்கப்படுகிறது.
இதற்கிடையில், தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் தூய்மைப் பணிகளை ஒதுக்கீடு செய்ய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தூய்மைப் பணியாளர்கள் பணி பாதுகாப்பு கேட்டு தொடர்ந்து போராட்டம் நடத்திவருகின்றனர்.
இந்நிலையில், கடந்த மார்ச் 1ஆம் தேதி 500-க்கு மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள், அம்பத்தூர் மண்டல அலுவலகம் எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, மாநகராட்சி அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது தேர்தல் முடியும் வரை தனியார் நிறுவனம் தூய்மைப் பணிகளை மேற்கொள்ளாது, தொழிலாளர்களின் வேலைக்கு உத்தரவாதம் வழங்கப்படும் என உறுதி அளித்தனர்.
இதனை அடுத்து, தூய்மைப் பணியாளர்கள் சாலை மறியலைக் கைவிட்டு கலைந்துசென்றனர். மேலும், இது தொடர்பாக வழக்கும் நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஜூலை 1ஆம் தேதி வரை தற்போதைய நிலையே தொடர வேண்டும் என உத்தரவிட்டார்.
இதற்கிடையில், அம்பத்தூர் மண்டல அலுவலர்கள் கடந்த சில தினங்களாகத் தூய்மைப் பணியாளர்களை தனியார் ஒப்பந்த நிறுவனத்தில் வேலைக்குச் சேர கூறி கட்டாயப்படுத்திவருகின்றனர். மேலும், அந்நிறுவனத்தில் பணிக்குச் சேரவில்லை என்றால் நடவடிக்கை எடுப்பதாக மிரட்டுகின்றனர் எனப் புகார் எழுந்துவந்தது.
இதனை அடுத்து, இன்று (ஏப்ரல் 27) அம்பத்தூர் மண்டலத்தில் உள்ள 12 வார்டுகளில் உள்ள தூய்மைப் பணியாளர்கள் வேலை செய்யாமல் வார்டு அலுவலகத்தில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால், வார்டுகளில் தூய்மைப் பணிகள் பாதிக்கப்பட்டதோடு, பல தெருக்களில் தொட்டிகளில் குப்பைகள் குவிந்து சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது. பின்னர் அலுவலர்கள், தூய்மைப் பணியாளர்களின் பிரதிநிதிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர்.