சென்னை பெரியமேடு பட்டுநூல் சர்தார் ஷா தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன் (24). ரவுடியான இவர், பெரியமேடு பகுதியில் அமைந்துள்ள கடைகளில் கூலி வேலை செய்து வருகிறார். மணிகண்டன் மீது கொலை, அடிதடி வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.
இந்த நிலையில் நேற்று இரவு மணிகண்டன் பெரியமேடு ராஜா முத்தையா சாலை சூளைமேடு ரவுண்டானா இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அருகில் உறவினர் விசேஷ நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்னர் தனது நண்பர்களான சார்க், தாவூத், அருண் குமார், ரீச்சேஸ் ஆகியோருடன் சாலையில் நடந்து சென்றார். அப்பொழுது அங்கு வந்த ஒரு கும்பல் மணிகண்டனை கட்டையால் சரமாரியாகத் தாக்கினர்.
பின்னர் அந்த கும்பல் மணிகண்டனின் தலையில் பலமாகத் தாக்கிவிட்டு, அங்கிருந்து தப்பி ஓடினர். இந்த விவகாரத்திலிருந்து தங்களைக் காத்துக்கொள்ளுவதற்காக, மணிகண்டனின் நண்பர்கள் அங்கிருந்து ஓடினர். பின், மணிகண்டனின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து சம்பவம் இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், மணிகண்டனை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அவரை சோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பெரியமேடு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்ட விசாரணையில், புளியந்தோப்பு கே.பி பார்க் பகுதியைச் சேர்ந்த தங்கம், ஹேமந்த் குமார், பாலு ஆகிய மூவரும் முன்விரோதம் காரணமாக, மணிகண்டனை கட்டையால் தாக்கி கொலை செய்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, தப்பி ஓடிய இம்மூவரையும் தேடும் பணியில் பெரியமேடு காவல் துறையினர் ஈடுபட்டனர்.
அந்தத் தேடுதலில், யானை கவுனி பாலம் காவல் நிலையம் பூத் எதிரே மணிகண்டனை கொலை செய்த கும்பல் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் பெரியமேடு காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று சோதனை செய்தனர்.
அப்போது, அங்கு ரவுடி பாலு (26) தலை, கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் வெட்டுக் காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்தார். அதன் பின்னர், காவல் துறையினர் அவரை மீட்டு ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர்.
மேலும் ஒரே இரவில் இரண்டு கோஷ்டிகளுக்குள் நடந்த மோதலில் ஏற்பட்ட கொலை சம்பவத்தால், அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. தலைமறைவாக உள்ள கும்பலை தனிப்படை அமைத்து காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: கிணற்றில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு - 10 மணி நேர போராட்டத்திற்கு பின் உடலை மீட்ட தீயணைப்பு துறையினர்!