இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோவிட் தொற்றின் இரண்டாவது அலையால் தமிழ்நாடு வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். தற்போது தமிழ்நாட்டில் 1,52,389 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர். இவர்களில் 31,410 பேர் ஆக்ஸிஜன் உதவியோடு சிகிச்சை பெற்று வருகின்றனர். வரலாறு காணாத இந்த சவாலை சமாளிக்கவும், மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றது.
மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகளின் எண்ணிக்கையை உயர்த்துதல், அனைத்து உயிர் காக்கும் மருந்துகளையும் தடையின்றி கிடைக்கச் செய்தல், ஆக்ஸிஜன் விநியோகத்தை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்தப் பேரிடரை எதிர்கொள்வதற்கு தமிழ்நாடு அரசு கூடுதலான நிதி ஆதாரங்களை செலவிட வேண்டிய தேவை உள்ளது. எனவே, அரசின் முனைப்பான முயற்சிகளுக்கு சமுதாயத்தின் ஒவ்வொரு பிரிவினரும் தங்களால் இயன்ற வகையில் உதவி செய்ய வேண்டியது அவசியம்.
இச்சூழலில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நன்கொடை வழங்கிட வேண்டுமென்று உங்கள் அனைவருக்கும் தனிப்பட்ட முறையில் வேண்டுகோள் விடுக்கின்றேன்.
பணத்தினை கீழ்க்கண்ட இணையதளம் வழியாகச் செலுத்தி ரசீதினை https://ereceipt.tn.gov.in/cmprf/cmprf.html என்ற இணையதளம் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.
மின்னணு மூலம் பரிவர்த்தனை செய்ய இயலாதவர்கள் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பலாம்:
அரசு இணைச் செயலாளர், பொருளாளர்
முதலமைச்சர் பொது நிவாரண நிதி
நிதித்துறை, தமிழ்நாடு அரசு
தலைமைச் செயலகம்
சென்னை – 600 009
இதையும் படிங்க: சட்டப்பேரவை புதிய உறுப்பினர்கள் பதவியேற்பு