சென்னை: இந்திய மீனவர்கள் 16 பேரை மீட்க கோரியும், அவர்களது மீன்பிடிப் படகுகளை விடுவிக்க கோரியும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வாயிலாக நடவடிக்கை எடுக்கக் கோரி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் ஸ்டாலின் எழுதி உள்ள கடிதத்தில், தமிழ்நாட்டின் தேங்காப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 16 இந்திய மீனவர்கள் (தமிழ்நாட்டைச் சேர்ந்த 6 மீனவர்கள், கேரளாவைச் சேர்ந்த 7 மீனவர்கள் மற்றும் மேற்கு வங்கம் மாநிலத்தை சேர்ந்த 3 மீனவர்கள்) 09.02.2023 அன்று பதிவு எண். IND-TN-15-MM-3793-ல் “புனித மேரி” என்ற பெயர் கொண்ட விசைப்படகில் கடலுக்குள் சென்றுள்ளனர்,
அந்த மீனவர்கள் 23.02.2023 அன்று ஆழ்கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, பிரிட்டிஷ் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் (BIOT) டியாகோ கார்சியா அதிகாரிகளால் விசைப்படகுடன் கைது செய்யப்பட்டனர். இந்த பகுதி மீனவர்கள், மீன்பிடி தொழிலை மட்டுமே தங்கள் வாழ்வாதாரமாக நம்பி உள்ள நிலையில், இந்த கைது சம்பவம் அவர்களின் குடும்பங்களுக்கு மிகுந்த இன்னல்களை ஏற்படுத்தும்.
இதையும் படிங்க: "வட மாநிலத்தினருக்கு எதிராக திமுக ஒருபோதும் வெறுப்பு அரசியல் செய்யவில்லை" - அமைச்சர் துரைமுருகன்
எனவே, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் மற்றும் தூதரகங்கள் மூலமாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு, இச்சம்பவத்தினை அவர்களின் கவனித்தில் எடுத்துச் சென்று, கைது செய்யப்பட்ட 16 இந்திய மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகினையும் விடுவித்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, முதலமைச்சர் ஸ்டாலின், தமிழ்நாட்டைச் சேர்ந்த 6 மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்து, இதுபோன்ற தாக்குதல்களை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு வலியுறுத்தி இருந்தார். இதுதொடர்பாக அவர் எழுதி இருந்த கடிதத்தில், மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியைச் சேர்ந்த 6 மீனவர்கள் பிப்.21ஆம் தேதி தரங்கம்பாடி மீனவ கிராமத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
பிப்.23ஆம் தேதி அதிகாலையில் இலங்கைக் கடற்படையினர் அவர்களை தாக்கியுள்ளனர். இப்படி தமிழ்நாட்டு மீனவர்கள் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தப்படுகிறது. இதனால் மீனவர்கள் மத்தியிலும் அவர்களது குடும்பத்தினர் மத்தியிலும் அச்சமும், பீதியும் ஏற்பட்ட்டுள்ளது. ஆகவே, இந்த தாக்குதல் விவகாரத்தை இலங்கை அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று, இந்திய மீனவர்கள் மீதான தாக்குதல்களைத் தடுக்க உயர்மட்ட அளவில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படிங்க: ஜெயலலிதா எடுக்கும் முடிவுகளை போலவே என் முடிவுகளும் இருக்கும் - அண்ணாமலை