சென்னை: உலக மகளிர் தினத்தையொட்டி சென்னை அண்ணா சாலையில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலைய பெண் காவலர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். மார்ச் 8ஆம் நாளான உலக மகளிர் தினத்தையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை இன்று (8.3.2023) முகாம் அலுவலகத்தில் சந்தித்த காவல் துறை இயக்குநர்கள் முதல் காவலர்கள் வரையிலான பெண் காவல்துறையினர் மற்றும் முதலமைச்சரின் பாதுகாப்பு பிரிவில் பணிபுரியும் பெண் காவலர்களுக்கு, தனது மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டு, அவர்களுக்கு பரிசாக மரக் கன்றுகளை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து, சென்னை, அண்ணா சாலையில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று, அங்கு பணிபுரியும் பெண் காவலர்களுக்கு மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்து, நினைவுப் பரிசாக புத்தகங்களை வழங்கினார். முன்னதாக, சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தினவிழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (8.03.2023) கலந்துகொண்டு பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறப்பாக பணியாற்றிய மாவட்ட நிர்வாகங்களுக்கு விருதுகளை வழங்கினார். இந்நிகழ்வில் நாமக்கல், நாகை மற்றும் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர்கள் விருதுகளை பெற்று கொண்டனர்.
இந்த நிகழ்வின்போது, உயர்கல்வித் துறை அமைச்சர் க. பொன்முடி, சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், மற்றும் காவல்துறை உயர் அலுவலர்கள் உடனிருந்தனர். மேலும் மகளிர் தினத்திற்கு வாழ்த்து தெரிவித்து தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவரது ட்விட்டர் பக்கத்தி வாழ்த்து செய்தி பதிவிட்டுள்ளார்.
அதில், பெண்கள் குறித்த சிந்தனை மாற்றத்துக்கு வழிவகுப்பதாக இந்த மகளிர் தினம் அமையட்டும்! பொருளாதாரத் தன்னிறைவு, உயர்கல்வி, உரிய வேலைவாய்ப்பு, ஆகியவற்றைத் தமிழ்நாட்டின் ஒவ்வொரு பெண்ணுக்கும் உறுதிசெய்வதே நமது திராவிட மாடல்! பாலினச் சமத்துவமின்றி மானுடச் சமத்துவம் இல்லை! என்று பதிவிட்டுள்ளார். மேலும், சி.எம்.ஓ. தமிழ்நாடு என்னும் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள வாழ்த்து செய்தியை தது பக்கத்தில் ரீ ட்விட் செய்துள்ளார்.
அந்த வாழ்த்துச் செய்தியில், திராவிட மாடல் ஆட்சி பொறுப்பேற்றதும் நான் இட்ட முதல் கையொப்பமே பெண்களின் பொருளாதாரச் சுதந்திரத்துக்கு வழிவகுக்கும் இலவச பேருந்து திட்டத்துக்காத்தான். மகளிருக்கான ஊதியத்துடன் கூடிய பேறுகால விடுப்பை 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்த்தினோம். அரசு பணியிடங்களில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டை 40 சதவீதமாக உயர்த்தியுள்ளோம்.
மூவலூர் இராமிர்தம் அம்மையார் பெயரில் பெண்கள் உயர்கல்வி பெறுவதை உறுதிசெய்யும் வகையில் ‘புதுமைபெண்’ திட்டத்தை உருவாக்கி கல்லூரி செல்லும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கி வருகிறோம். மகளிர் சுய உதவிக்குழுக்கள் கூட்டுறவு சங்கங்களில் பெற்றுள்ள கடன்களையும், நகைக்கடன்களையும் தள்ளுபடி செய்து வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம். 11 மாநகராட்சிகளை பெண்களுக்காக ஒதுக்கியுள்ளோம்” என தமிழக அரசு பெண்களுக்காக செயல்படுத்தியுள்ள திட்டங்களை குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: குடிநீர் இணைப்பு கேட்ட பெண்ணை 5 மாதமாக அலைக்கழித்த பெண் அதிகாரி!