சென்னை கொளத்தூர் சட்டப்பேரவை தொகுதிக்கு உள்பட்ட எவர்வின் பள்ளியில் இன்று (அக்.16) பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முதலைச்சர் மு.க. ஸ்டாலின் பயனாளிக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நலத்திட்ட உதவி
அப்போது மு.க.ஸ்டாலின் 560 பயனாளிகளுக்கு ரூ.2.87 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மருத்துவமனை பயன்பாட்டிற்கான நலத்திட்ட உதவி
அதனைத் தொடர்ந்து, கொளத்தூர், பெரியார் நகர், மேம்படுத்தப்பட்ட அரசு புறநகர் மருத்துவமனையின் பயன்பாட்டிற்காக தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் சார்பில் வழங்கப்பட்ட ஒரு அவசரகால ஊர்தியையும், கரோனா தடுப்பூசி பணிக்காக 2 வாகனங்களின் சேவைகளையும் முதலமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும் 210 நபர்கள் அமரக்கூடிய மூன்று இருக்கைகள் கொண்ட 70 நாற்காலிகளையும் மருத்துவமனையின் பயன்பாட்டிற்காக வழங்கினார்.
பின்னர், கொளத்தூர், சென்னை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு முதலமைச்சர் 70 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்களை வழங்கி, 34 ஆசிரியர்களுக்கு சிறப்பு செய்தார்.
பள்ளிக்கு கட்டடம் கட்டுவதற்கு உதவி
மேலும், அப்பள்ளிக்கு கட்டடம் கட்டுவதற்காக தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் சார்பில் 1 கோடி ரூபாய்க்கான காசோலையை தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அலுவலர் கே.வி. ராமமூர்த்தி முதலமைச்சரிடம் வழங்கினார்.
அத்துடன் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் சார்பில், 1,500 மாணவர்கள் அமரும் வகையில் 25 லட்சம் ரூபாய் மதிப்பில் அளிக்கப்பட்ட மேஜைகள் மற்றும் நாற்காலிகளையும் பள்ளியின் பயன்பாட்டிற்காக தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் திரு. கலாநிதி வீராசாமி, சட்டப்பேரவை உறுப்பினர் தாயகம் கவி, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் ஜெ. விஜய ராணி, அரசு உயர் அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: போட்றா வெடிய... ஸ்டாலினின் வேண்டுகோளை ஏற்ற ராஜஸ்தான் முதலமைச்சர்!