தமிழ்நாடு சட்டப்பேரவை விதி 110-இன்கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை குறித்து புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
அந்த அறிவிப்புகள் கீழ்வருமாறு:
- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களின் நலனைக் கருத்தில்கொண்டு, ஆறு தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாகவும், ஐந்து நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், 17 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் 48.74 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிலை உயர்த்தப்படும்.
- பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்தும்வகையில், இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு, தொழில்முனைவோர், நில மேம்பாட்டுத் திட்டம், சுய உதவிக் குழு பொருளாதார மேம்பாட்டுத் திட்டம் போன்ற திட்டங்கள் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும்.
- 10 ஆண்டுகளுக்கு மேலான, 80 ஆதிதிராவிடர் நல விடுதிகள், 20 பழங்குடியினர் நல விடுதிகளில் கூடுதல் கழிவறைகள், குளியலறைகள், மின் சாதனங்கள் போன்ற அடிப்படை வசதிகள் தலா 20 லட்சம் ரூபாய் வீதம் மொத்தம் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.
- தற்போதுள்ள விலைவாசியினைக் கருத்தில்கொண்டு, ஆதிதிராவிடர் குடும்பங்களில் ஏற்படும் இறப்பிற்கு ஈமச் சடங்கிற்காக வழங்கப்பட்டுவரும் நிதியுதவி, இரண்டாயிரத்து 500 ரூபாயிலிருந்து ஐந்தாயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
- ஆதிதிராவிட மக்கள் தங்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகளைக் கொண்டாடும்வகையில் அனைத்து வசதிகளுடன் கூடிய 24 சமுதாயக் கூடங்கள் 14.49 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.
- தமிழ் வளர்ச்சித் துறையில், தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் எஞ்சிய ஆறு கிலோ மீட்டர் நீளத்திற்குச் சுற்றுச்சுவர் கட்டுவதற்காக அரசு 10 கோடி ரூபாய் நிதி வழங்கப்படும்.
இதையும் படிங்க: கரோனா நிவரணம்: முதலமைச்சரின் முக்கிய அறிவிப்புகள்!