சென்னை: மயிலாப்பூரை சேர்ந்த தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் நிர்வாக பங்குதாரரான அக்ஷய் சரின் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ராம்குமாரின் மகன் துஷ்யந்த் மற்றும் துஷ்யந்தின் மனைவி அபிராமி ஆகியோர் நிர்வகிக்கும் ஈசன் புரொடக்சன்ஸ் நிறுவனத்துடன் வர்த்தக தொடர்பு வைத்திருந்ததாக தெரிவித்துள்ளார்.
வியாபார நடவடிக்கைகளுக்காக துஷ்யந்த் சார்பில் தலா 15 லட்சம் ரூபாய்க்கான இரண்டு காசோலைகளை கடந்த 2019ம் ஆண்டு அளித்ததாகவும், ஆனால் போதிய பணம் இல்லாததால் இரண்டு காசோலைகளும் திரும்பி வந்துவிட்டதாக கூறியுள்ளார்.
வங்கிக் கணக்கில் பணம் இல்லாதது தெரிந்தும் வேண்டுமென்றே தங்களுக்கு காசோலை அளித்ததாகவும், இதுதொடர்பாக அனுப்பப்பட்ட வக்கீல் நோட்டீஸ்க்கு பதிலளிக்காததுடன், தங்களது பணத்தையும் திரும்ப அளிக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளார்.
எனவே ராம்குமாரின் மகன் துஷ்யந்த், துஷ்யந்த்தின் மனைவி அபிராமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென சைதாப்பேட்டை விரைவு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மகன் கொடுக்க வேண்டிய பணத்திற்கு பொறுப்பேற்பதாக ராம்குமார் உத்தரவாதம் அளித்துள்ளதால் அவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனுவில் கூறியுள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் சிவாஜியின் மகன் ராம்குமார், சிவாஜியின் பேரன் துஷ்யந்த், பேரனின் மனைவி அபிராமி ஆகியோர் மீது ஜாமீனில் வெளிவரக்கூடிய பிடிவாரண்ட் பிறப்பித்து, வழக்கு விசாரணையை பிப்ரவரி மாதம் 14ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.
இதையும் படிங்க: துணையாக இருப்போம்.. இணை அரசாங்கம் செய்ய மாட்டோம் - ஆளுநர் தமிழிசை பேச்சு