சென்னை: சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் சதீஷ்(48). இவர் எம்.சி.எம் கார்டன் பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் அச்சகராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஜெயஶ்ரீ(43). இவர்களுக்கு 21 வயதில் ஶ்ரீவர்சன் என்ற மகனும், 17 வயதில் மகளும் உள்ளனர். இதில், உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த ஶ்ரீவர்சன், கடந்த 4ஆம் தேதி உயிரிழந்துவிட்டார். மகனைப் பிறந்த தாய் ஜெயஸ்ரீ மனமுடைந்து போயுள்ளார்.
இந்த நிலையில், ஜெயஸ்ரீ கடந்த 19ஆம் தேதி அதிகாலை வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார். தனது மனைவி வீட்டில் இல்லாததை அறிந்த கணவர் சதீஷ், இது குறித்து தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் தண்டையார்பேட்டை ஆய்வாளர் ராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். அப்போது, வீட்டில் சோதனை செய்தபோது ஜெயஸ்ரீ வீட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்பு எழுதி வைத்த கடிதம் கிடைத்தது. அதில், "எனது மகன் ஶ்ரீயை பிரிந்து வாழ முடியாது. அவன் போன இடத்திற்கே நானும் போக விரும்புகிறேன். மகளே நீ பன்னிரண்டாம் வகுப்பு படிப்பு முடித்தவுடன் திருமணம் செய்து கொள்ள வேண்டும். நீ அழ வேண்டாம், தந்தையை பார்த்து கொள்" என்று ஜெயஸ்ரீ உருக்கமாக தெரிவித்திருந்தார்.
இதையடுத்து போலீசார் வீட்டின் அருகில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், ஜெயஸ்ரீ அதிகாலை 5 மணி அளவில் வீட்டில் இருந்து, தியாகராயா கல்லூரி மெட்ரோ ரயில் நிலையம் செல்வது பதிவாகி இருந்தது. பின்னர் போலீசார், மெட்ரோ நிலையற்குள்ளே சென்று விசாரித்தபோது அவர் சென்ட்ரல் ரயில் நிலையம் சென்றது தெரியவந்தது. பிறகு சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய போலீசாரின் உதவியை நாடியபோது, அங்குள்ள சிசிடிவி கேமரா பதிவின்படி, ஜெயஸ்ரீ 9வது கவுண்டரில் டிக்கெட் எடுத்து கொண்டு, 7வது பிளாட்பாரம் சென்று, கங்கா காவேரி எக்ஸ்பிரஸ் விரைவு ரயிலில் ஏறியது தெரியவந்தது.
இதனிடையே ஜெயஸ்ரீ தனது உறவினர் ஒருவரை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு, தான் ரயிலில் பயணம் செய்வது குறித்தும், கங்கை நதிக்கு சென்று ஜலசமாதி அடைவது குறித்தும் தெரிவித்துள்ளார். இதனை உறவினர் ஜெயஸ்ரீயின் கணவரிடம் தெரிவிக்கவே, அவர் போலீசாரிடம் கூறியுள்ளார். உடனடியாக போலீசார் டிக்கெட் பரிசோதகரை செல்போனில் தொடர்பு கொண்டு, ரயில்வே போலீசாரிடம் தெரிவிக்கும்படி அறிவுறுத்தினர். அதன்பேரில், ரயில்வே பாதுகாப்பு படையினர் உதவியுடன், நாக்பூரில் வைத்து ஜெயஸ்ரீயை மீட்டனர். இது தொடர்பாக அவரது கணவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, கணவர் சதீஷ் தற்போது விமானம் மூலம் நாக்பூர் சென்றுள்ளார்.
மீட்கப்பட்ட ஜெயஸ்ரீ இன்று(ஜூன் 21) விமானம் மூலம் சென்னை வருவார் என தெரிகிறது. கடிதம் கிடைத்ததும் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு, ரயில்வே போலீசார் உதவியுடன் ஜெயஸ்ரீ மீட்ட தண்டையார்பேட்டை காவல் ஆய்வாளரான ராஜனுக்கு சதீஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.
இதையும் படிங்க: TN Next DGP: தமிழ்நாட்டின் அடுத்த டிஜிபி யார்?