சென்னை: தமிழ்நாட்டில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்துள்ளார். இந்நிலையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து, கோவைக்கு வந்தே பாரத் ரயில் சேவையை அவர் தொடங்கி வைக்கிறார். சேவையை தொடங்கும் முதல் நாளான இன்று (ஏப்ரல் 8) மட்டும் அந்த ரயில், 9 ரயில் நிலையங்களில் நிறுத்தப்படுகின்றது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து வந்தே பாரத் ரயில் மாலை 4.10 மணிக்கு புறப்படும். பெரம்பூருக்கு 4.14க்கும், அரக்கோணத்துக்கு மாலை 5.03 மணிக்கும் செல்லும். குடியாத்தம் ரயில் நிலையத்துக்கு 6.02க்கு செல்லும் ரயில், வாணியம்பாடிக்கு 6.36 மணிக்கு சென்றடையும்.
திருப்பத்தூருக்கு இரவு 7.04 மணிக்கும், மொரப்பூருக்கு 7.34க்கும், சேலத்துக்கு இரவு 8.18 மணிக்கும் செல்கிறது. ஈரோடு ரயில் நிலையத்துக்கு இரவு 9.01க்கு செல்லும் வந்தே பாரத் ரயில், திருப்பூருக்கு இரவு 9.46 மணிக்கு செல்லும். பின்னர் கோவை ரயில் நிலையத்துக்கு இரவு 10.40 மணிக்கு சென்றடையும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாரம் தோறும் புதன்கிழமையை தவிர பிற நாட்களில் சென்னை - கோவை மற்றும் கோவை - சென்னை இடையே வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது. தினமும் காலை 6 மணிக்கு கோவையில் இருந்து புறப்படும் ரயில், காலை 11.50 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வந்தடையும். மறுமார்க்கமாக சென்னை சென்ட்ரலில் இருந்து பிற்பகல் 2.25 மணிக்கு புறப்படும் ரயில், இரவு 8.15 மணிக்கு கோவையை சென்றடையும்.