சென்னை: சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் இன்று அதிகாலை (ஜூன் 13) கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, உடல் நலக்குறைவு காரணமாக ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட கோரி அமலாக்க பிரிவு தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி, மருத்துவமனைக்கு சென்று செந்தில் பாலாஜியை நேரில் பார்வையிட்டு, பின் அவரை வரும் 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பித்தார்.
இந்த உத்தரவை நிராகரிக்க கோரியும், ஜாமீன் வழங்கக் கோரியும், சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி வழங்க கோரியும், செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. விசாரணையின்போது, செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ, நேற்று காலை 7.00 மணி முதல் இன்று அதிகாலை 2 மணி வரை அமலாக்க பிரிவினர் செந்தில் பாலாஜியை விசாரித்துள்ளதாகவும், அப்போது குடும்ப உறுப்பினர்கள், வழக்கறிஞர்கள் எவரையும் அனுமதிக்கவில்லை என்றும் வாதிட்டார். மேலும், கைது குறித்து குடும்ப உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை என்றும், கைதுக்கான காரணங்கள் தெரிவிக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
ஓமந்தூரார் மருத்துவமனை பரிசோதனையில் இதயத்தில் மூன்று அடைப்புகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளதாகவும் தெரிவித்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, ஏற்கனவே 22 மணி நேரம் அமலாக்க பிரிவினரால் துன்புறுத்தப்பட்டுள்ள நிலையில், உடல் நிலையை கருத்தில் கொண்டு இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் எனவும், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
அமலாக்கப் பிரிவு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டரும், மூத்த வழக்கறிஞருமான ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், செந்தில் பாலாஜி கைதுக்கான காரணங்கள் தெரிவிக்கப்பட்டதாகவும், கைது மெமோவைப் பெற செந்தில் பாலாஜி மறுத்ததாகவும், நீதிமன்ற காவலில் வைக்கப்பட்ட நிலையில், அதை நிராகரிக்க கோர முடியாது என்றும் வாதிட்டார்.
கைது தொடர்பாக செந்தில் பாலாஜியின் மனைவி மற்றும் சகோதரருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அனைத்து நடைமுறைகளும் பின்பற்றப்பட்டதாகவும் தெரிவித்த வழக்கறிஞர் சுந்தரேசன், செந்தில் பாலாஜியை நீதிமன்ற காவலில் வைக்க பிறப்பித்த உத்தரவு சரியானது என்றும், அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்றும், இடைக்கால ஜாமீன் வழங்க சட்டத்தில் இடம் இல்லை என்றும் தெரிவித்தார்.
நேற்று வரை ஆரோக்கியமாக இருந்தவர், திடீரென உடல் நலக்குறைவு என்று கூறியிருக்கிறார், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவருக்கு தேவையான சிகிச்சைகளை வழங்க அமலாக்கப் பிரிவு தயாராக இருக்கிறது என்றும், 15 நாட்கள் அவரை காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அல்லி, காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்க பிரிவு தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்கும்படி செந்தில் பாலாஜி தரப்புக்கு உத்தரவிட்டு, விசாரணையை நாளைக்கு(ஜூன் 15) தள்ளி வைத்தார்.
காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரிய மனு மீது முடிவு எடுத்த பிறகு செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதும், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதி கோரிய மனு மீதும் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் நீதிபதி அல்லி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: V Senthil Balaji: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜூன் 28 வரை நீதிமன்ற காவல்!