சென்னை: பாஜக மாநில தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஊடகவியலாளரின் கேள்விக்கு பதிலளிக்காமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதற்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பத்திரிகையாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழ்நாடு பாஜக தலைவர் கே. அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர் ஒருவர், சமீபத்திய கோயம்புத்தூர் ஈஷா மையத்தில் இருந்து காணாமல் போய், பின்னர் சடலமாக கண்டெடுக்கப்பட்ட பெண் ஒருவரின் மரணம் குறித்து எழுப்பினார்.
இந்த கேள்வியை எதிர்கொள்ள முடியாமல் தன் நிதானத்தை இழந்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, கேள்வி கேட்டவரைப் பார்த்து நீங்கள் எந்த ஊடகம் என்று கேட்க ஆரம்பித்து, செய்தியாளரின் கேள்விக்கு நோக்கம் கற்பிக்கும் வகையில் அண்ணாமலை பேசியிருக்கிறார்.
ஊடகவியலாளர் கேள்வியை எதிர்கொள்ள முடியாவிட்டால் அமைதி காக்கலாம். மாறாக ஊடகவியலாளர்கள், எந்த ஊடகம் என்பதை கேட்பதுடன் அவர்களின் கேள்விக்கும் செய்தி சேகரிக்கும் பணி குறித்தும் அவதூறு செய்வது ஆரோக்கியமான செயல் அல்ல. இந்த நிதானமற்ற போக்கு ஒரு கட்சியின் தலைவருக்கு அழகல்ல.
இந்த மோசமான அணுகுமுறையை மிரட்டல் போக்கை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாகக் கண்டிக்கிறது. அரசியலில் வளர்ந்து வரும் அண்ணாமலை ஊடகங்களின் உரிமையை உணர்வுகளை உரசிப்பார்க்கும் போக்கை கைவிட்டு நயத்தகு நாகரிக உறவை ஊடகங்களுடன் பேண கற்றுக் கொள்ள வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ரபேல் வாட்சை கழற்றி சோதித்து பார்க்க சொன்ன அண்ணாமலை!