சென்னை: பெசன்ட் நகர் கடற்கரையில் இளைஞர்கள் போதைக்கு அடிமையாதல், மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள் ஆகியவற்றைத் தடுக்கும் வகையிலும் இதுகுறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் இன்று (ஜன.8) வின்டேஜ் பைக் பேரணி (Vintage Bike Rally) நடைபெற்றது.
சென்னை பெருநகர காவல் ஆணையம் மற்றும் ரோட்டரி கிளப் (Rotary Club) இணைந்து நடத்திய இந்த வின்டேஜ் பைக் பேரணியில் 700-க்கும் மேற்பட்டோர் 500-க்கும் மேற்பட்ட பழங்கால பைக்குகள் கொண்டு பேரணியில் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியை சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கொடியசைத்து ஆரம்பித்தார்.
நிகழ்ச்சியில் பேசிய சங்கர் ஜிவால், 'போதையில்லா தமிழ்நாட்டை உருவாக்குவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை முதலமைச்சர் தலைமையிலான அரசு சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறது' எனத் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய வடக்கு மண்டல இணை ஆணையர் ரம்யா பாரதி, 'இளைஞர்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டை தடுப்பதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சீண்டல்களைத் தடுக்கும் வகையிலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இம்மாதிரியான வின்டேஜ் பைக் பேரணி நடத்தப்படுகிறது. இவ்வாறு நடத்தப்படுவதன் மூலம் பொதுமக்கள் எளிதில் விழிப்புணர்வு அடைவார்கள். மேலும், கடந்த ஆண்டில் தமிழ்நாடு முழுவதிலும் 2100 கிலோ அளவிலான தடை செய்யப்பட்ட போதை வஸ்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு முழுவதுமாக அழிக்கப்பட்டுள்ளது' என்றார்.
இதையும் படிங்க: டெல்லி போலீசார் மீது தாக்குதல் நடத்திய ஆப்பிரிக்கர்கள்!