சென்னை: கடந்த மாதம் 30-ஆம் தேதி நடிகர் சிலம்பரசன் நடிப்பில் வெளியான பத்து தல திரைப்படம் வெளியானது. அப்போது சென்னை ரோகிணி தியேட்டருக்கு படம் பார்க்க வந்த நரிக்குறவர் சமூக மக்கள் சிலரை உரிய டிக்கெட் வைத்திருந்தும் தியேட்டர் ஊழியர்கள் உள்ளே அனுமதிக்காததால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வெளியானதைத் தொடர்ந்து திரைப்பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் கோயம்பேடு காவல் நிலைய போலீசார் ரோகிணி திரையரங்க ஊழியர்கள் மீது எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். அதன்பின் பாதிக்கப்பட்டவர்கள் ஜாதி சான்றிதழைப் பெற்று பொன்னேரி தாசில்தாரிடம் காவல்துறை தரப்பில் விளக்கம் கேட்கப்பட்டது.
இதில் பொன்னேரி தாசில்தார் தரப்பிலிருந்து பாதிக்கப்பட்டவர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து கோயம்பேடு காவல் நிலைய போலீசார் ரோகிணி திரையரங்க ஊழியர்கள் மீது போடப்பட்ட எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீக்குவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
அரசு வழக்கறிஞருக்கு இது தொடர்பாக கோப்புகள் அனுப்பப்பட்டு சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர். மீதமுள்ள சட்டப்பிரிவான சட்டவிரோதமாகத் தடுத்து நிறுத்துதல் என்ற பிரிவின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.]