சென்னை, எழும்பூரில் உள்ள காவலர் மருத்துவமனையில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவரும் காவலர்களின் நலன் குறித்து காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேரில் சென்று விசாரித்தார்.
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த காவல் ஆணையர் கூறுகையில், தேனாம்பேட்டையைச் சேர்ந்த பிரபல ரவுடி சிடி மணி மீது 10 கொலை வழக்குகள், வெடிகுண்டு வழக்கு உள்பட 32 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இருப்பினும் அவர் விசாரணைக்கு ஆஜராகாமல் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார். இந்த நிலையில், இன்று (ஜூன்.02) போரூர் பகுதியில் சிடி மணி காரில் செல்வதாக காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
இந்தத் தகவலின் பேரில் உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் தலைமையிலான தனிப்படை காவல் துறையினர், அவரை பிடிக்கச் சென்றனர். அப்போது சிடி மணி காரிலிருந்தபடியே காவல் துறையினரை நோக்கி கள்ளத் துப்பாக்கியால் இரண்டு முறை சுட்டார். அதில் உதவி ஆய்வாளர் பால கிருஷ்ணனின் தோள்பட்டையில் குண்டு உரசியபடி சென்றதால் அவர் காயம் அடைந்தார்.
அதன்பின் காவல் துறையினர் தற்காப்புக்காக துப்பாக்கியை எடுத்து சிடி மணியை நோக்கி சுட முயன்றனர். அதில் தப்பித்த அவர் அங்கிருந்த மேம்பாலம் ஒன்றிலிருந்து கீழே குதித்தார். இதில் அவரது கை, காலில் உள்ள எலும்புகள் முறிந்தன. தொடர்ந்து சிடி மணியை கைது செய்து அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறோம். மணி வைத்திருந்த துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. சென்னையில் ரவுடிகளுக்கு இடமில்லை. ரவுடிகளின் பட்டியலைத் தயாரித்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதை பொதுமக்கள் பார்க்கலாம்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், ”முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீதான வழக்கு விவகாரத்தில், பாதிக்கப்பட்ட பெண்ணிடம் வாக்குமூலம் வாங்குவதற்காக மேஜிஸ்திரேட்டிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. காவல் நிலையத்தில் பள்ளி, கல்லூரி மாணவிகள், பெண்கள், பாலியல் புகார்கள் அளித்தால் அது முறையாக பரிசீலனை செய்யப்படும்” என்றார்.