ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கமலேஷ் குமார் என்பவர் கிண்டி தொழிற்பேட்டையில் 'செயின் கிராஃப்ட்' என்ற பெயரில் சொந்தமாக நகைப் பட்டறை நடத்திவந்துள்ளார். இந்தப் பட்டறையில் சுமார் 68 ஊழியர்கள் பணியாற்றிவந்துள்ளனர்.
இங்கு மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பசூரில் சேக், ரீடியோ கமர்க்கர், சராபிந்து, பிரசார் மாதூரி ஆகியோர் புதிதாகப் பணிக்குச் சேர்ந்துள்ளனர். கடந்த மாதம் ஒன்பதாம் தேதி கமலேஷ் குமார் 106 சவரன் தங்கக் கட்டியை நான்கு பேரிடம் கொடுத்து நகைகளாகச் செய்ய கூறியுள்ளார். ஆனால், அவர்களோ தங்கத்தை திருடிக்கொண்டு தப்பியோடியுள்ளனர்.
இது குறித்து கமலேஷ் குமார் கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் அங்குள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வுசெய்துள்ளனர். அப்போது, நான்கு பேர் பட்டறையின் பின்பக்கச் சுவர் வழியாக ஏறி தப்பிச் செல்வது தெரியவந்தது.
இதனையடுத்து, காவல் துறையினர் தனிப்படை அமைத்து வடமாநில கும்பலைத் தேடியுள்ளனர். குறிப்பாக அவர்கள் சென்ற சிசிடிவி காட்சிகள் மற்றும் அவர்களது செல்போன் நெட்வொர்க் மூலம் சோதனை நடத்தினர்.
விசாரணையில், கால் டாக்ஸி மூலம் கோயம்புத்தூர் மாவட்டத்திற்குச் சென்றது தெரியவந்தது. பின்னர், அங்குள்ள விடுதி, ஆட்டோ ஸ்டாண்ட் உள்ளிட்ட இடங்களில் தேடியுள்ளனர். செல்போன் எண்ணை வைத்து காவல் துறை தேடுவதை அறிந்த வட மாநில கும்பல் செல்போன் எண்ணை ஸ்விட்ச் ஆப்பை செய்துவிட்டு அங்கிருந்து கேரளா பகுதிக்குத் தப்பிச் சென்றுள்ளனர்.
செய்வதறியாமல் திகைத்த காவல் துறையினர், இந்தக் கும்பல் வேலைக்குச் சேரும்போது கொடுத்த ஆதார் அட்டை விவரங்களை வைத்து மேற்கு வங்கத்தில் உள்ள அவர்களது வீட்டிற்கு விரைந்துள்ளனர். வீட்டிற்கு வடமாநில கும்பல் வராததால், குடும்பத்தினரின் செல்போன் எண்களுக்கு வந்த எண்ணை ஆய்வுசெய்துள்ளனர்.
அப்போது மேற்கு வங்க மாநிலத்திலிருந்தே அடிக்கடி ஒரு தொலைபேசி அழைப்புவருவதை கண்டுபிடித்த காவல் துறை, அந்த எண்ணின் சிக்னலை வைத்து மேற்கு வங்கம் வர்தமான் பகுதியில் பதுங்கியிருந்த சராபிந்துவை (24) கைதுசெய்துள்ளனர். விசாரணையில் சென்னையிலிருந்து கால் டாக்ஸி மூலம் கோயம்புத்தூர் வரை வந்ததாகவும், பின்னர் கேரளாவிற்கு ரயிலில் வந்துவிட்டோம்.
ஆனால், கையில் பணமில்லாததால் திருடிய தங்கத்தில் கேரளாவில் 8 கிராம் விற்றுவிட்டு அந்தப் பணம் மூலம்தான், நானும் பஷிருள் சேக்கும் மேற்கு வங்கத்திற்கு விமானம் மூலம் வந்ததாகவும், மீதமுள்ள இருவர் ரயில் மூலம் கர்நாடகவிற்குத் தப்பிச் சென்றதாகத் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, கேரளாவில் விற்கப்பட்ட 8 கிராம் நகையை மீட்டனர். மேலும், சராபிந்துவை சிறையில் அடைத்தனர். அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மேற்குவங்க பரத்பூரில் பதுங்கியிருந்த மற்றொரு கூட்டாளி பஷிருள் சேக்கை கைதுசெய்து விசாரிக்கையில் வீட்டின் கழிப்பறையில் திருடிய 364 கிராம் தங்கத்தைப் புதைத்துவைத்துள்ளது தெரியவந்தது. உடனடியாக, தங்கத்தைத் தோண்டி காவல் துறையினர் பறிமுதல்செய்துள்ளனர். மீதமுள்ள நகைகளை கூட்டத்தின் தலைவனான பிரசான் மாதூரி எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
கர்நாடக மாநிலத்தில் கூர்க் பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் பிரசான் மாதூரி பணிபுரிந்துவருவதாக காவல் துறைக்குத் தகவல் கிடைத்துள்ளது. உடனடியாக அப்பகுதிக்கு விரைந்த தனிப்படை பிரசான் மாதூரியை மடக்கிப் பிடித்து கைதுசெய்தனர். அவரிடமிருந்து 254 கிராம் நகைகளைப் பறிமுதல்செய்தனர். மொத்தம் 78 சவரன் நகைகள் இதுவரை மீட்கப்பட்டுள்ளது.
இவர்கள் கேரளா, மேற்கு வங்கம் போன்ற பல்வேறு நகைக்கடைகளில் பணிபுரிவதுபோல் சேர்ந்துவிட்டு சிறிய அளவிலான நகைகளைத் திருடிச்செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இதுவரை யாரும் புகாரளிக்காததால் ஜாலியாகச் சுற்றித்திரிந்துள்ளனர். கிண்டியில் 106 சவரன் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றால் வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடலாம் என்று எண்ணத்தில் கொள்ளையடித்ததாகவும், தங்க கட்டிகளாக இருந்ததால் கொள்ளையடித்த நகைகளை விற்றால் மாட்டிக் கொள்வோம் என்று பதுக்கிவைத்திருந்தாகத் தெரிவித்துள்ளனர்.
மேலும் தலைமறைவாக இருந்து வரக்கூடிய மற்றொரு கூட்டாளியைத் தீவிரமாகத் தேடிவருகின்றனர். பல்வேறு மாநிலங்களுக்குச் சென்று கொள்ளையடித்த நபர்களை கைதுசெய்த தனிப்படை காவல் துறைக்கு காவல் ஆணையர் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.