சென்னை: பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் அடையார் ஆற்றங்கரையோரம் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் உள்ளனர். இந்த நிலையில், தமிழகத்தில் ஏற்பட்ட மிக்ஜாம் புயலால் பொதுமக்கள் தங்களது இயல்பு வாழ்க்கையை இழந்தனர். அதனால் பல நடிகர்கள் மற்றும் பிரபலங்கள் நிதியுதவியை அளித்து வருகின்றனர்.
அந்த வரிசையில் தற்போது மிக்ஜாம் புயல் தாக்கத்தினால் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான குடும்பங்களுக்கு, தனியார் தொலைக்காட்சி பிரபலம் மற்றும் சமூக சேவகர் KPY பாலா மற்றும் பிக் பாஸ் புகழ் அமுதவாணன் ஆகியோர், நேற்று குடியிருப்பு பகுதிகளான பல்லாவரம், அனகாபுத்தூர், பம்மல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கனமழையால் பாதிககப்பட்ட மக்களை நேரில் சந்தித்து நிதியுதவி அளித்தனர்.
அதாவது குடும்பத்திற்கு தலா 1,000 ரூபாய் வீதம், சுமார் 200 குடும்பங்களுக்கு என மொத்தம் 2 லட்சம் ரூபாய் நிவாரண உதவித் தொகையாக வழங்கினார். இதனால சமூக வலைத்தளத்தில் நடிகர் பாலாவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
சொந்த ஊருக்கு படையெடுக்கு சென்னைவாசிகள்: புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்த நிலையில், சென்னை உள்பட பல பகுதியில் மழை நீர் சூழ்ந்து, பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. மேலும், மழை நீரானது வீடுகளுக்குள்ளேயும் புகுந்ததால், மக்கள் வீட்டை விட்டு வெளியில் வர முடியாத அவல நிலை ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து, அவர்களை தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்பு படையினர் மீட்டு முகாம்களுக்கு அனுப்பி வைத்தனர். தற்போது புயலின் தாக்கம் குறைந்து, மழை நின்று 2 நாட்களாகியும் பல பகுதிகளில் மழைநீர் வடியததால், மக்கள் தென் மாவட்டங்களில் இருக்கக்கூடிய தங்களது உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக பேருந்துகளில் பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் பெருங்களத்தூர் பேருந்து நிலையத்தில் கூட்டம் அலைமோதி வருகின்றது.
மூன்று நாட்களாக இருளில் வாழும் முடிச்சூர் பகுதி மக்கள்: புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்த நிலையில், தாம்பரம் அடுத்த முடிச்சூர், இராயப்பாநகர், பி.டி.சி கோட்ரஸ் ஆகிய பகுதியில் வெள்ள நீர் சூழ்ந்து பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கபட்டுள்ளது. இந்நிலையில் மழை நீரானது வீட்டுக்குள்ளும் புகுந்ததால், அவர்களை தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்புப் படையினர் மீட்டு முகாம்களில் தங்க வைத்துள்ளனர்.
இருப்பினும், சுமார் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்களது வீட்டின் மேல் தளத்தில் தங்கி உள்ளனர். வெள்ள நீர் பாதிப்பால் முன்னெச்சரிக்கையாக, சென்னையில் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. ஒரு பக்கம் மழையால் கடும் பாதிப்பில் இருந்த நிலையில், கடந்த 3 நாட்களாக மின்சாரம் இன்றி முடிச்சூர் பகுதி மக்கள் தவித்து வருகின்றனர்.
ஓ.எம்.ஆர் சாலையில் தேங்கி நிற்கும் மழை நீரால் வாகன ஓட்டிகள் அவதி: சென்னை பழையமகாபலிபுர சாலை, தரமணி அருகே டைடல் பார்க் ஐடி நிறுவனங்கள், தனியார் நட்சத்திர விடுதிகளில் இருந்து மோட்டார் மூலம் வெளியேற்றப்படும் மழை நீர் சாலையில் விடுவதால் ஓ.எம்.ஆர்.சாலையில் மழை நீர் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் சாலையை கடந்து செல்ல போது, கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். மேலும் இதற்கு அருகில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அங்கு நீர் புகுந்தால் ஏதேனும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகையால் மழை நீரை சாலையில் விடுவதை தவிர்த்து மாற்று வழியில் அப்புறப்படுத்த கோரிக்கை எழுந்து வருகிறது.