இந்தியாவில் மிகவும் விரிவான பொதுப்போக்குவரத்தை கொண்ட நகரங்களில் ஒன்று, சென்னை. இந்த மாநகரம் பலரின் வாழ்வாதாரத்தை காப்பதாலோ என்னவோ ஒவ்வொரு ஆண்டும் இங்கு நோக்கி படையெடுக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. இதனால் முக்கியச் சாலைகள் பெரும்பாலும் நெரிசலாகவே காணப்படுகின்றன.
இந்தப் போக்குவரத்து நெரிசலைக் கொஞ்சம் கட்டுக்குள் கொண்டு வரும் வகையில் கடந்த 2015ஆம் ஆண்டு ஜூன் 29ஆம் தேதி சென்னையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது. தற்போது சென்னையில் மெட்ரோ சேவை இரண்டு வழித்தடங்களில் இயக்கப்படுகிறது.
தற்போது சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகளுக்காக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 61 ஆயிரத்து 843 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நேற்று (நவ.21) அடிக்கல் நாட்டினார். இதன் சிறப்பு அம்சம் என்னவெனில், வரும்2026ல் சென்னை நகரம் 173 கி.மீ. நீளத்திலான மெட்ரோ ரயில் வழித்தடப்பகுதிகளுடன், நாள் ஒன்றுக்கு 25 இலட்சம் பயணிகளை ஏற்றி செல்லும் வகையில் இத்திட்டம் அமையும் என்பதே. இது பொதுப்போக்குவரத்து பயணங்களில் 25 விழுக்காடு அளவில் இருக்குமென கணக்கிடப்பட்டுள்ளது.
தற்போது செயல்பட்டு வரும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் முதல் கட்டம் குறித்து பார்ப்போம்.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் முதல் கட்டத் திட்டம்
45 கி.மீ நீளத்தில் இரண்டு வழித்தடங்களை உள்ளடக்கியது. வண்ணாரப்பேட்டை முதல் விமான நிலையம் வரையிலான நீல வழித்தடம், புரட்சித் தலைவர் டாக்டர். எம்.ஜி. ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ முதல் பரங்கிமலை வரையிலான பச்சை வழித்தடம், மொத்தம் 32 மெட்ரோ நிலையங்களுடன் கட்டி முடிக்கப்பட்டு தற்போது இயக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவிலேயே நகரத்தின் ரயில்வே முனையங்கள், பேருந்து முனையங்கள், விமான நிலையம் ஆகியவை முதற்கட்டத்திலேயே இணைக்கப்பட்டுள்ளது.
முதல் கட்டத்தின் நீட்டிப்புத் திட்டம்
வண்ணாரப்பேட்டை முதல் திருவொற்றியூர் (விம்கோ நகர்) வரை 9.051 கி.மீ நீளத்தில் 8 மெட்ரோ நிலையங்களுடன் (2 சுரங்கப்பாதை மற்றும் 6 உயர்த்தப்பட்ட மெட்ரோ நிலையங்கள்) நகரத்தின் மத்திய வணிக மாவட்டப் பகுதியை, வடக்கு பகுதியுடன் இணைக்கிறது. இத்திட்டம் ஜனவரி 2021ஆம் ஆண்டு இறுதியில் போக்குவரத்துக்காகத் திறக்கப்படத் திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் திட்டம் இரண்டாம் கட்டத்தின் சிறப்பம்சங்கள்
விரைவான, பாதுகாப்பான, திறன்மிக்க, நிலையான பொதுப்போக்குவரத்து அமைப்பு தேவை என்பதை கருத்தில் கொண்டு, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் கட்டம்-II திட்டம் 118.9 கி.மீ நீளத்தில் மூன்று வழித்தடங்களுடன் (வழித்தடம்-3, 4 மற்றும் 5) ரூ. 61,843 கோடி செலவு மதிப்பீட்டில் மத்திய அரசு, தமிழ்நாடு அரசு, ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை, ஆசிய மேம்பாட்டு வங்கி, ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி மற்றும் புதிய மேம்பாட்டு வங்கி ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
வழித்தடம் 3
மாதவரம் முதல் சிட்காட் வரை - 45.8 கி.மீ நீளத்திலான இந்த வடக்கு தெற்கு வழித்தடம், முக்கிய இடங்களான தகவல் தொழில்நுட்ப வழித்தடம், அடையாறு, மயிலாப்பூர், புரசைவாக்கம் ஆகிய இடங்களை இணைப்பதுடன் 50 மெட்ரோ நிலையங்களை(20 உயர்த்தப்பட்ட மெட்ரோ நிலையங்கள் மற்றும் 30 சுரங்கப்பாதைமெட்ரோ நிலையங்கள்) உள்ளடக்கியது.
வழித்தடம் 4
கலங்கரை விளக்கம் முதல் பூவிருந்தவல்லி புறவழிச்சாலை வரை – 26.1 கி.மீ நீளத்திலான இந்த கிழக்கு மேற்கு வழித்தடம், நகரத்தின் வணிகப் பகுதிகளான நந்தனம், தியாகராய நகர், வடபழனி, வளசரவாக்கம், போரூர், பூவிருந்தவல்லியை இணைப்பதுடன், மொத்தம் 30 மெட்ரோ நிலையங்களை (18 உயர்த்தப்பட்ட மெட்ரோ நிலையங்கள் மற்றும் 12 சுரங்கப்பாதை மெட்ரோ நிலையங்கள்) உள்ளடக்கியது.
வழித்தடம் 5
மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை – 47.0 கி.மீ நீளத்திலான இந்த சுற்றுவட்ட வழித்தடம், முக்கிய இடங்களான வில்லிவாக்கம், அண்ணா நகர், கோயம்பேடு, விருகம்பாக்கம், ராமாபுரம், மடிப்பாக்கம், மேடவாக்கம் ஆகியவற்றை இணைப்பதுடன் மொத்தம் 48 மெட்ரோ நிலையங்களை (42 உயர்த்தப்பட்ட மெட்ரோ நிலையங்கள் மற்றும் 6 சுரங்கப்பாதை மெட்ரோ நிலையங்கள்) உள்ளடக்கியது.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் கட்டம் -II திட்டத்தில் இரட்டை சுரங்கங்கள் தோண்டுவதற்காக மொத்தம் 23 சுரங்கம் தோண்டும் இயந்திரங்களைப் பயன்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் கட்டம் -II திட்டம் இந்தியாவில் உள்ள மெட்ரோ ரயில் திட்டங்களிலேயே, ஒரே தடவையில் செயல்படுத்தப்படவுள்ள தனிப்பட்ட மிகப்பெரிய மெட்ரோ இரயில் திட்டமாகும்.
வரும் 2026ல் இந்த மூன்று வழித்தடங்களும் முடிவுற்ற பின்னர், சென்னை நகரம் 173 கி.மீ. நீளத்திலான மெட்ரோ ரயில் வழித்தட பகுதிகளுடன், நாள் ஒன்றுக்கு 25 லட்சம் பயணிகளை ஏற்றி செல்லும் வகையிலும், இது பொதுப்போக்குவரத்து பயணங்களில் 25 விழுக்காடு அளவிலும் இருக்குமென கணக்கிடப்பட்டுள்ளது. இதனால் முதலீடுகள், பொருளாதார செயல்பாடுகளுக்கு உகந்த உலகத்தரம் வாய்ந்த நகரமாக அமையும்.
பன்முக போக்குவரத்து ஒருங்கிணைப்பின் ஒரு பகுதியாக, கட்டம் -II கட்டமைப்பு ஏனைய பொதுப் போக்குவரத்துகளான புறநகர் ரயில், பெருந்திரள் துரிதப் போக்குவரத்து அமைப்பு, நகரப் பேருந்து சேவை போன்றவற்றுடன் 21 வெவ்வேறு இடங்களில், சிரமங்கள் இன்றியும் எளிதாக மாறும் வகையில் ஒருங்கிணைக்கப்படவுள்ளது. இந்தத் திட்டம், மக்களின் வாழ்க்கை வசதியை மேம்படுத்துவது என்ற அரசின் முக்கிய குறிக்கோளை நிறைவேற்றும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:சிங்கார சென்னையின் போக்குவரத்தையே முற்றிலுமாக மாற்றியமைக்கும் மெட்ரோ திட்டம்!