சென்னை: சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை அருகில் சென்னை மெட்ரோ ரயில் சுரங்கப்பாதையில் சில தொழில்நுட்ப பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இப்பணியில் ஒவ்வொரு நிலையிலும் ஒரு சில நாட்கள் தேவைப்படுவதால் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளதாவும், விரைவில் இப்பணிகள் முடிக்கப்பட்டு ஒரு மாத காலத்தில் இந்த சுரங்கப்பாதை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தயாராகும் என்றும் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை அருகில் மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை பணிகள் முழுமை அடைந்து வருகிறது. இந்நிலையில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரே பயணிகள் மற்றும் பொதுமக்கள் சாலையை எளிதாக கடந்து செல்வதற்காக நகரும் படிக்கட்டு மற்றும் மின்தூக்கி வசதிகளுடன் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சுரங்கப்பாதையில் சில தொழில்நுட்பப் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொழில்நுட்ப பணிகளுக்கு ஒவ்வொரு நிலையிலும் ஒரு சில நாட்கள் தேவைப்படுகிறது என நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது மழைநீர் உள்ளே வராத வகையிலும், மழைநீர் தேங்காத வகையிலும், அதற்கான வடிகால் வசதியும் செய்யப்பட்டு வருகிறது.
இப்பணிகள் அனைத்தும் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இப்பணிகள் விரைவில் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், இந்த சுரங்கப்பாதையை கண்காணிக்க காவலர் நியமிக்கப்பட்டுள்ளார். இங்கு ஏதேனும் சமூக விரோதச்செயல், அத்துமீறல், உண்மைக்கு புறம்பான செயலில் ஈடுபடுபவர்கள் மீது காவல் துறை மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, இந்த சுரங்கப்பாதை பகுதியில் சமூகவிரோத செயலில் ஈடுபடக்கூடாது. மீறினால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இதையும் படிங்க: சென்னை விமான நிலையத்திற்கு புதிய முதன்மை சுங்கத்துறை ஆணையர் நியமனம்!