சென்னை: சாலை விபத்துகளால் பொருளாதாரத்தில் ஏற்படும் தாக்கத்தைக் குறைக்க சாலைப் பாதுகாப்பில் அரசு முதலீடுகளை அதிகரிக்க வேண்டும் என்று சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
இந்த ஆய்வறிக்கையை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை ஐஐடி இயக்குநர் வி.காமகோடி உள்ளிட்டோர் முன்னிலையில் வெளியிட்டார்.
அப்போது அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது, "அனைத்து விபத்துகளிலும் மறைந்திருக்கும் அடிப்படை உண்மை, அதில் ஏற்படும் செலவுகள்தான். சென்னை ஐஐடியில் உள்ள சாலைப் பாதுகாப்புக்கான சிறப்பு மையத்தின் இந்த ஆய்வு, அரசுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. அரசுக்கும் மக்களுக்கும் விபத்தின் மறைமுகமான இந்த இழப்புகளைக் குறித்து கண்டறிவதற்கும், மேம்படுத்தப்பட்ட நிதித் திட்டமிடலுக்கு பயன்படுத்துவதற்கும், மாநிலத்தில் சாலைப் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளில் சரியான முறையில் முதலீடு செய்வதற்கும் அரசாங்கம் இந்த ஆய்வைப் பயன்படுத்த முடியும்.
மேலும் தமிழ்நாடு அரசின் சுகாதாரத் துறையுடன் இணைந்து பல்வேறு முன்னோடித் திட்டங்களை உருவாக்கிச் செயல்படுத்தி வருகிறது.
'தமிழ்நாட்டில் சாலை விபத்துகளின் சமூக - பொருளாதார செலவுகள்' என்ற தலைப்பில், ஐஐடி மெட்ராஸின் சாலைப் பாதுகாப்புக்கான சிறப்பு மையம் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இது சமூக - பொருளாதார தாக்கத்தின் மூன்று வெவ்வேறு மதிப்பீடுகளுடன் வெளிவந்துள்ளது. இந்த மதிப்பீடுகள் மருத்துவச் செலவுகள், வரி விதிப்பு, வருவாய் இழப்பு போன்றவற்றைக் கருத்தில் கொண்டு கணக்கிடப்பட்டுள்ளன" என்றார்.
சென்னை ஐஐடி இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி கூறும்போது, "சாலை விபத்துக்கள், பாதிக்கப்பட்டவர்கள், அவர்களது உறவினர்கள் ஆகியோருக்கு அதிகபட்ச அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. இங்கு நடத்தப்பட்ட ஆய்வு அவற்றை அளவிட முயற்சிப்பது மட்டுமல்லாமல், அவற்றைக் குறைப்பதற்கான முறைகளையும் சுட்டிக்காட்டுகிறது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: குழந்தைகளுக்கான குடற்புழு நீக்க மாத்திரைகள் - மேயர் பிரியாவின் புதிய அறிவிப்பு