சென்னை ஐ.ஐ.டியில் முதுகலை மனிதநேயம் பாடப்பிரிவில் படித்து வந்த மாணவி ஃபாத்திமா லத்தீஃப் சனிக்கிழமை (நவ.08) இரவு தனது விடுதியறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இதனையடுத்து மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து, தீவிர விசாரணை மேற்கொண்ட கோட்டூர்புரம் காவல்துறையினர், இயற்கைக்கு மாறான மரணம் என மாணவியின் தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்
தற்கொலை தொடர்பாக எவ்வித கடிதங்களும், ஆதாரங்களும் கிட்டாத நிலையில், மாணவியின் தந்தை அப்துல் லத்தீஃப், தனது மகளின் செல்ஃபோனில் பதியப்பட்ட சில கருத்துகளை காவல்துறையிடம் தெரிவித்தார்.
அதனடிப்படையில், 'உதவிப் பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் தான், இறப்பிற்குக் காரணம்' என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், ஹேமச்சந்திரன் காரா, மிலின் பிராஃமே என்னும் இரண்டு பேராசிரியர்களும் இதில் சம்மந்தப்பட்டுள்ளதாகவும் மாணவியின் தந்தை தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, மாணவியின் தற்கொலைக்குக் காரணமாக கருதப்படும் சுதர்சன் பத்மநாபன், ஹேமச்சந்திரன் காரா, மிலின் பிராஃமே ஆகிய மூன்று பேர் மீதும் கோட்டூர்புரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தற்போது, மூன்று பேரிடமும் விசாரணை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனோடு துன்புறுத்தல் காரணமாகவே மாணவி தற்கொலை செய்துகொண்டாரா? என்ற கோணத்தில் ஃபாத்திமா லத்தீஃப்புடன் பயின்ற மாணவ, மாணவிகளிடமும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2018ஆம் ஆண்டு முதல் தற்போது மாணவி ஃபாத்திமா லத்தீஃப் தற்கொலை சம்பவம் வரை, சென்னை ஐஐடியில் ஐந்து தற்கொலை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஐஐடியில் கேரள மாணவி தற்கொலை - 11 பேராசிரியர்களிடம் விசாரணை