சென்னை: சவுக்கார்பேட்டை வீரப்பன் தெருவில் ஆந்திராவைச் சேர்ந்த ரகுமான் மற்றும் சுப்பாராவ் ஆகியோர் கடந்த பிப்ரவரி 3ஆம் தேதி, நகைகள் வாங்குவதற்காக ஒரு கோடியே 40 லட்சம் ரூபாய் கொண்டு வந்தனர். அவர்களை காவலர் என்று கூறி ஒரு கோடியே 40 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
இதனையடுத்து கொள்ளையர்களைப் பிடிக்க தனிப்படைகள் அமைத்த காவல் துறையினர், தீவிர விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து இந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய முக்கியப் புள்ளி இம்ரான் என காவல்துறை புகைப்படத்தை வெளியிட்டது. ஏற்கனவே இவர் மீது மத்திய குற்றப்பிரிவு, சிபிசிஐடியில் வேலூர், தஞ்சாவூர், விழுப்புரம், குடியாத்தம், தாம்பரம், கொடுங்கையூர், வியாசர்பாடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 17 வழக்குகள் நிலுவையில் உள்ளது.
தொடர் விசாரணையில் முக்கிய கும்பல் தலைவன் இம்ரான் உள்பட இம்ராஸ், இம்தியாஸ் மற்றும் மும்தாஜ் உள்ளிட்ட 4 பேரை தனிப்படை காவல் துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 70 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய மீதமுள்ளவர்களை தனிப்படை காவல் துறையினர் தேடி வந்த நிலையில், பிரான்சிஸ் சேவியர் இமானுவேல் மற்றும் அன்பரசு ஆகிய இரண்டு பேரும் திருச்சி நீதிமன்றத்தில் திடீரென சரணடைந்தனர்.
பின்னர் சரணடைந்த இருவரையும் கைது செய்த காவல் துறையினர், அவர்களிடம் விசாரணை நடத்தினர். அதில் சரணடைந்த இருவரும் கொள்ளை சம்பவத்தின்போது, காவல் துறையினராக நடித்தது தெரிய வந்துள்ளது. மேலும் முக்கிய கொள்ளையனான இம்ரான் மாட்டிக் கொண்டதையடுத்து, தாங்களும் மாட்டிக்கொள்வோமோ என்ற பயத்தில் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் மூலம் சரணடைந்ததாக தெரிவித்துள்ளனர்.
இவர்களிடம் இருந்து 10 லட்சம் ரூபாய் பணம் விற்கப்பட்டுள்ளது. இவ்வாறு மொத்தமாக 80 லட்சம் ரூபாய் பணம் மீட்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதன்படி, தொடர்ந்து பல ஆண்டுகளாக குருவிகள் மற்றும் ஹவாலா பண தரகர்களை குறி வைத்து 1 கோடி ரூபாய்க்கு மேல் மட்டுமே கொள்ளையடிக்கும் இம்ரான் மூளையாக செயல்படுவதும், கைதான மீதமுள்ள இம்ராஸ், இம்தியாஸ் மற்றும் தலைமறைவாக இருக்கும் பாட்ஷா ஆகியோர் இம்ரான் சொல்வதை செய்து முடிக்கும் நபர்களாகவே இருந்து வந்துள்ளனர்.
மொத்தம் 17 கொள்ளை சம்பவங்களில் தொடர்புடைய இம்ரான், அனைத்து வழக்குகளில் இருந்தும் தப்பிக்க கொள்ளையடித்த பணத்திலேயே பிஏ பிஎல் சட்டப் படிப்பை முடித்துள்ளார். இவ்வாறு தான் கொள்ளையடித்த பணத்தில், வழக்கறிஞர்களுக்கு தனியாக தொகை ஒதுக்கி, தொடர்ந்து அடுத்தடுத்து கொள்ளை சம்பவங்களை நிகழ்த்தி உள்ளார்.
இதன் காரணமாக தன்னை பிடிக்க வரும் காவல் துறையினரிடம் சவால் விட்டு கைது செய்யுமாறு காவலர்களை மிரட்டும் தொனியில் பேசி வந்துள்ளார். இவ்வாறாக இந்த மாதம் வேலூரில் துப்பாக்கி, கஞ்சா, பணம் உள்ளிட்டவைகளுடன் கைதான இம்ரான் ஜாமீனில் வெளிவந்த உடனேயே யானை கவுனியில் இந்தக் கொள்ளை சம்பவத்தை நிகழ்த்தி உள்ளார்.
பின்னர் தான் கொள்ளையடித்த பணத்தில் கூட்டாளிகளுக்கு பங்கு கொடுத்துவிட்டு, கொடைக்கானலில் ஆடம்பர ரிசார்ட்டில் இருந்துள்ளார். ஒவ்வொரு நாளும் 10,000 ரூபாய்க்கு குறைவில்லாத உயர் ரக மதுவை குடித்து வந்துள்ளார். கொள்ளையடிக்கப்பட்ட பணத்தில் இரண்டு விலை உயர்ந்த நான்கு சக்கர வாகனங்களை வாங்கியுள்ளார் என தெரிய வந்துள்ளது.
கொள்ளை அடிக்கப்பட்டதில் மீதம் உள்ள பணத்தையும், தலைமறைவாக உள்ள பாட்ஷா என்ற நபரையும் தனிப்படை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: ஆன்லைன் ஷாப்பிங்கில் லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது!