சென்னை: தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களை டிச.4, 2023 அன்று புரட்டிப்போட்ட மிக்ஜாம் புயல் (MICHAUNG) மாலை டிச.5 ஆம் தேதி அன்று ஆந்திர மாநிலம், பாபட்லா அருகே கரையைக் கடந்தது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழையின் பாதிப்பு மற்றும் வெள்ளம் வெடிந்தாலும், கூட சில பகுதிகளில் இன்னும் வெள்ள நீர் வடியாததால் மக்கள் வீட்டிலும் நிவாரண முகாம்களில் முடங்கியுள்ளனர். சென்னையில் வேளச்சேரி, பள்ளிக்கரணை, வியாசர்பாடி, வண்ணாரப்பேட்டை, ஒக்கியம் துரைப்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டத்தில் மேற்கு தாம்பரம் ஆகிய பகுதிகளில் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளத்தில் மிதக்கும் வேளச்சேரி: மேலும், இன்று (டிச.6) காலை நிலவரப்படி சென்னை வேளச்சேரியில் மழை வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் தனியார் படகுகள் மூலம் மக்கள் வெளியேறி வருகின்றனர். குடிநீர், பால், உணவு போன்ற அத்தியாவசியப் பொருட்களைப் பெற முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் மின்சாரம், தொலைத்தொடர்பு சேவையானது இன்னும் கிடைக்கவில்லை என மக்கள் தரப்பில் இருந்து கூறப்படுகிறது.
சென்னையில் பல பகுதிகளில் இன்னும் தொலைத்தொடர்பு சேவையானது கிடைக்கவில்லை. வேளச்சேரி, பள்ளிக்கரணை ஆகிய பகுதிகளில் ஹெலிகாப்டர் மூலம் உணவுப் பொட்டலங்களை வழங்கும் பணி தொடங்கியுள்ளது. ராணுவம் இந்தப் பணியை மேற்கொண்டுள்ளது. மேலும், மீட்புப் பணிகளில் முழுவதுமாக நடைபெற்று வருகிறது.
பாதிப்பு உள்ளான இடங்களில் தொடரும் மீட்புப் பணிகள்: மேலும், வீடுகள் சுமார் முதல் தளம் மூழ்கும் அளவிற்கு வேளச்சேரி, மேற்கு தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் சூழ்ந்திருந்ததால் பேரிடர் மீட்புப் படையினர், தீயணைப்பு துறையினர் காவல்துறையினர், மாநகராட்சி அதிகாரிகள் ஆகியோர் ரப்பர் படகுகள் மீன்பிடி படகுகள் மூலம் அனைவரையும் பாதுகாப்பாக மீட்டு முகாம்களில் தங்கவைத்து வருகின்றனர்.
மண்ணிவாக்கம் ஏரியில் உடைப்பு: மேலும், 70 முகாம்களில் 12,184 பேர்களுக்கு உணவுகள் வழங்கபட்டுள்ளன. மேலும், வெள்ளம் பாதித்த பகுதிகளில் 3,95,000 பேர்களுக்கும் உணவு வழங்கப்பட்டது. குறிப்பாக, அதிக வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கு தாம்பரம், முடிச்சூர், வரதராஜபுரம், பிடிசி கோட்ரஸ், சிடிஓ காலனி, அமுதம் நகர், அஞ்சுகம் நகர், கோகுலம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 10 அடி உயரத்திற்கு முதல் தளத்தை முழுகும் அளவிற்கு மழைநீர் சூழ்ந்து தனித்தீவு போல் காட்சியளித்து வருகிறது. மேலும், மண்ணிவாக்கம் ஏரியில் உடைப்பு ஏற்பட்டதால், தொடர்ந்து வெள்ளம் நீர் வடியாத அவலம் ஏற்பட்டுள்ளது.
மீட்புப் பணியில் கைகொர்த்த மக்கள்: தொடர்ந்து வேளச்சேரி, துரைப்பாக்கம், பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகளில் மீட்புப் பணியில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வந்த தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர், தூய்மைப்பணியாளர்கள், தன்னார்வலர்கள், தனியார் நிறுவனங்கள் பொதுமக்கள் எனப் பலறும் இதில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இந்திய ராணுவத்தால், இதுவரை பள்ளிக்கரணை பகுதியில் 450 நபர்களும், மடிப்பாக்கம் பகுதியில் 200 பேரும், வேளச்சேரி பகுதியில், 65 பேரும், பெரும்பாக்கம் பகுதியில், 1200 பேரும் மீட்கப்பட்டுள்ளனர்.
முழுவீச்சில்மின் விநியோகம் சீரமைப்புப் பணிகள்: புயல் மற்றும் அதி கனமழை காரணமாக, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த டிச.3 நள்ளிரவு முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பல துணைமின் நிலையங்களை வெள்ளம் சூழ்ந்ததால் மின் விநியோகம் நிறுத்தப்பட்டது. இதனை சீரமைக்க மின்வாரியம் சார்பில், 15 ஆயிரம் பேர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடரும் வெள்ள அபயாம் எச்சரிக்கை: மிக்ஜாம் புயல் மற்றும் வரலாறு காணாத அதி கனமழையால் பாதிக்கப்பட்ட சென்னையில் மேலும், 6 பேர் உயிரிழந்தனர். அடையாறு கரையோர தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்ச்சியாக விடப்பட்டுள்ளது.
வட சென்னையில் வெள்ளம் பாதிப்புகள்: வட சென்னையின் முக்கிய பகுதியான சூளைப் பகுதியில், மழைநீர் தேங்கி சாக்கடைபோல, காட்சியளிக்கிறது. எண்ணூர், மணலி போன்ற பகுதிகளிலும் இதேப் பிரச்னை உள்ளதாக கூறப்படுகிறது. அம்பத்தூர் தொழிற்பேட்டை வடக்கு பகுதியில் சிறு குறு நிறுவனங்கள் சுமார் 1,000-க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் பல கோடி மதிப்புள்ள இயந்திரங்கள் சேதமடைந்தது. இதேபோல், பாடியில் இயங்கி வரும் டி.வி.எஸ் நிறுவனத்தில் புகுந்த வெள்ள நீரால் அந்த நிறுவனத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
8 ரயில்கள் ரத்து: சென்னை சென்ட்ரலில் இருந்து பெங்களூரு, மைசூரு, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல இருந்த 8 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பித்ரகுண்டா விரைவு ரயில், நீலகிரி விரைவு ரயில், மைசூரு விரைவு ரயில், மங்களூரு விரைவு ரயில் இன்று ரத்து செய்யப்பட்டது. ஏற்காடு விரைவு ரயில், மெயில் விரைவு ரயில், ஷீரடி அதிவிரைவு ரயில், போடிநாயக்கனூர் அதிவிரைவு ரயில் ரத்தாகி உள்ளதாக தெற்கு ரயில்வே சார்பில் தெரிவிக்கபட்டுள்ளது.
புறநகர் ரயில் சேவை சீரானது: சென்னை சென்ட்ரல் - ஆவடி - திருவள்ளூர் - அரக்கோணம் வழித்தடத்தில் இயங்கும் புறநகர் மின்சார ரயில்களின் சேவை சீரானது. இதேபோல சென்னை கடற்கரை, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறநகர் பகுதிகளான அரக்கோணம், கும்மிடிப்பூண்டி, தாம்பரம், செங்கல்பட்டு பகுதிகளுக்கு மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.
ஸ்வீடன் நாட்டு இளைஞருக்கு குவியும் பாராட்டு: மழை வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் சுறுசுறுப்புடன் ஈடுபட்டிருந்த ஸ்வீடன் நாட்டு இளைஞரைக் கண்டு பொதுமக்கள் ஆச்சரியம் அடைந்தனர். அந்த இளைஞர், 'அங்க கர்ப்பிணி இருக்காங்க. நான் காப்பாத்த போகணும்..' எனக்கூறும் வீடியோ வைரலாகிறது.
கர்ப்பிணி பெண்கள், கைக்குழந்தைகள் மற்றும் முதியோர்களை காப்பாற்றியவர்களுக்கு குவியும் பாரட்டுகள்: சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் கர்ப்பிணி பெண்கள், கைக்குழந்தைகள் மற்றும் முதியோர்களை தமிழக காவல்துறை, தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை, பேரிடர் மீட்புத் துறை ஆகியவற்றிற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இதையும் படிங்க: மிக்ஜாம் புயல் தாக்கம்; பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் மோடி ஆறுதல்!