சென்னை: சென்னை லூப் சாலையில் உள்ள மீன் கடைகளை அகற்றுவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் படகுகளை சாலைக்கு கொண்டு வந்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரை செல்லும் லூப் சாலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள மீன் கடைகளை அப்புறப்படுத்துவது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.
அதில், சென்னை கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரையிலான லூப் சாலையை, அப்பகுதி மீனவர்கள் ஆக்கிரமித்து மீன் கடைகள் அமைத்துள்ளதாகவும், ஐஸ் பெட்டிகளை சாலையோரம் வைத்தும், வாடிக்கையாளர்கள் வாகனங்களை நிறுத்துவதாலும் காலை 8 மணி முதல் 11 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீன் கடைகளை ஒழுங்குப்படுத்த நடவடிக்கை எடுத்து அறிக்கை தாக்கல் செய்யும்படி அரசுக்கும், மாநகராட்சிக்கும் உத்தரவிட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற பதிவுத்துறை கோரியுள்ளது. இதை விசாரித்த நீதிபதிகள் மாநகராட்சி சார்பில் எத்தனை நபர்களுக்கு கடைகள் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்தும், லூப் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றியும் ஏப்ரல் 18ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
இந்த நிலையில் கலங்கரை விளக்கம் சாலையில் உள்ள ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த மீன் கடைகளை கடந்த 7 தினங்களுக்கு முன்பு சென்னை மாநகராட்சி அதிகாரிகள் அகற்ற முற்பட்டனர். அப்போது அப்பகுதியில் வசித்து வரும் மீனவர் மக்கள், நொச்சிக்குப்பம், டுமீல் குப்பத்தில் வசித்து வரும் மக்கள் என சுமார் 500-க்கும் மேற்பட்டோர் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதுமட்டுமின்றி இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மீன், நண்டு உள்ளிட்டவைகளை திடீரென சாலையின் நடுவே கொட்டி அப்பகுதி மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களுடன் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.
இதனிடையே, நொச்சிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் சென்னை மாநகராட்சி அதிகாரிகளுடன் இன்று (ஏப்.17) போலீசார் முன்னிலையில் பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். எட்டாவது நாளாக, இன்றும் நீடிக்கும் இந்த போராட்டத்தின் நடுவே சென்னை மாநகராட்சி அதிகாரிகள் அப்பகுதியில் அமைக்கப்பட்டு இருக்கும் கடைகளை அகற்ற தொடர்ந்து முனைப்பு காட்டி வருகின்றனர்.
எனவே, அப்பகுதியில் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருப்பதற்காக, தொடர் கண்காணிப்பில் காவல் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒருபகுதியாக, போராட்டத்தை கலைப்பதற்காக ஆம்புலன்ஸ் வாகனங்கள், தீயணைப்பு வாகனங்கள் என 500-க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள் அப்பகுதியில் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே, அப்பகுதியில் சாலையின் நடுவே படகுகளைப் போட்டு அதன் மீது ஏறி நின்றபடி மீனவர்கள் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர். இந்த மீன் கடைகளை அகற்றுவதன் மூலம் தங்களது வாழ்வாதாரம் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவதாகவும், அப்பகுதியில் வசிக்கும் மீனவ மக்கள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக, தங்களது மீன் வியாபாரம் பாதிக்கப்படுவதால் பிள்ளைகளுக்கு பள்ளிக்கான தொகையைக் கூட செலுத்த முடியாமல் தினந்தோறும் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக வேதனையுடன் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 11 தமிழக மீனவர்கள்; சென்னை விமான நிலையம் வருகை