சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பரவலாக மழை பெய்து வரும் நிலையில், சென்னையில் கடந்த 2 நாட்களாக மழை நீடித்து வருகிறது. நேற்று காலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மழையால் சென்னையில் பல்வேறு இடங்களில் சாலை பெரிய அளவில் சேதமடைந்துள்ளது.
குறிப்பாக பரங்கிமலை, பூந்தமல்லி, ஆர்காட் ரோடு, போரூர், தியாகராய நகர் ஆகியவற்றைச் சுற்றியுள்ள பகுதிகள், பசுமைவழிச் சாலை, ஆர்.கே.மடம் சாலை, ஓ.எம்.ஆர் (OMR) சாலை போன்ற இடங்களில் அரசுத் துறையால் செய்யப்படும் சாலை போடுதல், மெட்ரோ உள்ளிட்ட பணிகளால் சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதைத் தவிர்த்து அம்பத்தூர், அண்ணாநகர், நுங்கம்பாக்கம் போன்ற இடங்களில் உள்ள சாலைகளின் ஒரு சில பகுதிகள் சேதமடைந்து மேலும், தண்டையார்பேட்டை இளைய தெரு, புரசைவாக்கம் டாக்டர் அழகப்பா சாலை, ராஜாஅண்ணாமலை சாலை, நுங்கம்பாக்கம் வீரபத்திர தெரு, ஸ்டெர்லிங் சாலை, பிராட்வே பிரகாசம் சாலை, பட்டாளம் ஆஞ்சநேயர் கோயில் அருகில், புளியந்தோப்பு உள்ளிட்ட பகுதிகளிலும் சாலைகள் சேதமடைந்துள்ளது.
இதனையடுத்து தேங்கிய மழை நீரை, போர்க்கால அடிப்படையில் மாநகராட்சிப் பணியாளர்களைக் கொண்டு மோட்டார் இயந்திரங்களைப் பயன்படுத்தி மழைநீரை அகற்றி வருகின்றனர். தற்போது, மழையால் சேதமடைந்த சாலைகளை சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றது
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், “சென்னை மாநகரம் 426 சதுர கி.மீ கொண்டது. இவற்றில், 35 ஆயிரம் சாலைகள் 5,800 நீளமுள்ள சாலைகளாக உள்ளன. மேலும், 19 நெடுஞ்சாலைகள் உள்ளன. அதுமட்டுமல்லாமல், சென்னையின் பல்வேறு பகுதிகளில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் மற்றும் பிற துறைகாளன மின்சாரத் துறை, குடிநீர் வாரியம் என பல துறைகளின் சார்பில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.
மேலும், சென்னை மாநகராட்சிப் பணியாளர்கள் மூலம் அவ்வப்போது மழை பெய்யும்போது, உடனுக்குடன் மழைநீரை அப்புறப்படுத்தி தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சாலை சந்திப்புகள் மற்றும் பல்வேறு இடங்களில் மற்ற துறைகளால் மேற்கொள்ளப்பட்ட பணிகளால், சேதமடைந்த சாலைகள் மற்றும் பள்ளங்களை உடனுக்குடன் சரி செய்யும் பணிகளையும் சென்னை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது” என கூறினர்.
இதையும் படிங்க: பிரணவ் ஜுவல்லர்ஸ் ரூ.100 கோடி மோசடி வழக்கு..! நடிகர் பிரகாஷ் ராஜ்க்கு அமலாக்கத்துறை சம்மன்! என்ன காரணம்?