சென்னை: சென்னையில் ரங்கநாதன் தெரு சந்திப்பு, புரசைவாக்கம் டவுட்டன் - புருக்லின் சாலை, ஜாம் பஜார் பாரதி சாலை, குறளகம் - தங்கசாலை சந்திப்பு, ஃபக்கி சாஹிப் தெரு, அபிபுல்லா தெரு, புலிபோன் பஜார், என்.எஸ்.சி. போஸ் சாலை, ராயபுரம் கல்மண்டபம் சாலை, அமைந்தகரை காவல் உதவி மையம் - திரு.வி.க.நகர் பூங்கா சந்திப்பு, ரெட்ஹில்ஸ் ஆஞ்சநேயர் சிலை - அம்பேத்கர் சிலை உள்ளிட்ட பகுதிகள் மக்கள் அதிகம் கூடும் இடங்களாக கண்டறியப்பட்டுள்ளன.
இங்கு இயங்கக்கூடிய வணிகவளாகங்கள், அங்காடிகள் உள்ளிட்டவை ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை செயல்பட அனுமதியில்லை என கடந்த ஜூலை 30ஆம் தேதி சென்னை மாநகராட்சி அறிவித்திருந்தது. இந்நிலையில் சென்னை மாநகராட்சி விதித்த தடை நாளை (ஜூலை 8) காலையுடன் முடிவடைகிறது.
நெறிமுறைகளை மீறினால் அபராதம்
இதனைத் தொடர்ந்து நாளை (ஆக.9) முதல், தடைவிதிக்கப்பட்ட அனைத்து இடங்களிலும் கடைகள் வழக்கம் போல் செயல்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும் வியாபாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நெறிமுறைகளை மீறும் அங்காடியின் மீது அபராதம் வசூலிக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு எண்ணிக்கையைப் பொறுத்து, வரும் வாரங்களில் நேரக் கட்டுப்பாடு விதிக்க முடிவு செய்துள்ளதாகவும் மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ’ஒவ்வொருவரும் 5 மரங்கள் நடுங்கள்...’ - சேலம் டூ சென்னை சைக்கிள் பேரணி!