தமிழ்நாடு முழுவதும் கடந்த மார்ச் முதல் ஜுலை வரையிலான கால கட்டங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவியது. தண்ணீர் பற்றாக்குறையால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாக நேர்ந்து. அரசு சார்பில் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதும், பல்வேறு தனியார் அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்டவை பொதுமக்களுக்கு தேவையான தண்ணீரை வினியோகித்து வந்தனர்.
இந்த நிலையில், தண்ணீரின் முக்கியத்துவத்தையும், மழைநீர் சேகரிப்பு உள்ளிட்டவற்றிற்காக அரசு சார்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், பருவமழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாக மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை ஏற்படுத்த அரசு அறிவுறுத்தியிருந்தது.
அனைத்து உள்ளாட்சி கட்டடங்கள், பள்ளிகள், கல்லூரிகள் அடுக்குமாடி குடியிருப்புகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை உருவாக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், இந்தக் குழுக்கள் தமிழ்நாடு முழுவதும் செயல்படும் என்றும் உள்ளாட்சித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், மூன்று மாத காலத்துக்குள் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை அமல்படுத்தவும், மழைநீர் சேகரிப்புக்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு மிக அவசியம் என்றும் கூறப்பட்டிருந்தது.
மழைநீர் சேகரிப்பு மற்றும் நீர் மறுசுழற்சியை மூன்று மாத காலத்துக்குள் முடிக்காத நிறுவனங்கள் மற்றும் கட்டட உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் என்று உள்ளாட்சித்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 38 ஆயிரத்து 507 கட்டடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை சீரமைக்க அதன் உரிமையாளர்களுக்கு சென்னை மாநகராட்சி நிர்வாகம் ஒரு வாரம் கெடு விதித்துள்ளது.
மேலும், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை இதுவரை அமைக்காத 69 ஆயிரத்து 490 பேருக்கு மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த அறிவிப்பில், வரும் செப்டம்பர் மாத இறுதிக்குள் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை ஏற்படுத்தவும் மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.