சென்னை: இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜக நாடாளுமன்ற உறுப்பினருமான பிரிஜ் பூஷன் சிங் சில வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லைகள் கொடுத்தார் எனவும், அவரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறி கடந்த ஜனவரி மாதம் முதல் சாக்ஷி மாலிக், தினேஷ் போகத், சங்கீதா போகத், பஜ்ரங் புனியா உட்படப் பல மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராடி வருகின்றனர்.
இவர்கள் அனைவரும் ஒலிம்பிக் போட்டி, உலக மல்யுத்தம் சாம்பியன்ஷிப் உள்ளிட்ட போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகள் ஆவார்கள். இவர்கள் டெல்லி ஜந்தர் மந்தரில் ஒருமாதத்திற்கும் மேலாக போராட்டம் நடத்தினர். இந்நிலையில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் புதிய நாடாளுமன்றத்தை முற்றுகையிட முயற்சி செய்த போது அவர்களை டெல்லி காவல்துறை வலுக்கட்டாயமாகக் கடந்த ஞாயிறன்று வெளியேற்றப்பட்டு கைது செய்தது.
இதனைக் கண்டிக்கும் விதமாக AIDWA, DYFI, SFI உள்ளிட்ட மாணவர்கள் இயக்கங்கள் சார்பில் தமிழ்நாடு முழுவதும் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் இன்று (ஜூன்2) நடைபெற்றது. அந்த வகையில் சென்னை அசோக் பில்லர் தபால் நிலையம் அருகில் மாதர் சங்கம் மற்றும் மாணவர்கள் அமைப்பு சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், இந்திய மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றவாளி பிரிஜ் பூஷன் சரண் சிங்கை கைது செய்ய வேண்டும் என முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதனைத் தொடர்ந்து பேசிய மாதர் சங்க மாநிலப் பொருளாளர் வி.பிரமிளா, “இந்திய மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றவாளி பிரிஜ் பூஷன் சரண் சிங்கை கைது செய்ய வேண்டும். மல்யுத்த வீரர்கள் மீது போடப்பட்ட வழக்கைத் திரும்பப் பெற வேண்டும். டெல்லி காவல்துறையின் அத்துமீறல்களையும், பாலியல் குற்றவாளிக்குத் துணைபோகும் ஒன்றிய பாஜக அரசையும் வன்மையாகக் கண்டிக்கின்றோம்” எனக் கூறினார்.
இதையும் படிங்க: ஆசிரியர்கள் குறித்து அமைச்சர் பொன்முடி பேச்சு.. தமிழக ஆசிரியர் கூட்டமைப்பு வேதனை!