சென்னை: ஆதம்பாக்கத்தில் உள்ள காவலர் குடியிருப்பில் வசிப்பவர், மாணிக்கம் (47). கால் டாக்ஸி ஓட்டுநர். இவரது மனைவி ராமலட்சுமி (43). ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் தலைமை காவலராகப் பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு சத்யா (வயது 20) என்ற மகள் இருந்தார். இவர் சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
ஓய்வுபெற்ற போலீஸ் உதவி ஆய்வாளர் தயாளன் என்பவரது மகன் சதீஷ் (23), சென்னை விமான நிலையத்தில் கார்கோ பிரிவில் பணியாற்றி வந்தார். சதீசும், சத்யாவும் காதலித்து வந்ததாகவும், இதற்கு சத்யாவின் பெற்றோர் தரப்பில் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டதால், சதீசுடன் பேசுவதை சத்யா நிறுத்தியதாகவும் கூறப்பட்டது.
இதையும் படிங்க: திமுக எம்எல்ஏ ஐய்யப்பன் பங்கேற்ற நிகழ்ச்சியில் பெட்ரோல் குண்டு வீச்சு!
இதனால் ஆத்திரமடைந்த சதீஷ், பரங்கிமலை ரயில் நிலையம் நடைமேடையில் நின்று கொண்டிருந்த சத்யாவிடம் பேச முயற்சித்தார். அவர் பேச மறுக்கவே, அங்கு வந்த மின்சார ரயில் முன்பு சத்யாவை, சதீஷ் தள்ளிவிட்டார். இந்தச் சம்பவத்தில் சத்யா ரயில் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சதீசை கைது செய்தனர்.
பின்னர், கமிஷனர் உத்தரவின் பேரில் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இந்நிலையில், தன்னை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ததை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் சதீஷ் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் எம்.சுந்தர், ஆர்.சக்திவேல் ஆகியோர் விசாரித்தனர்.
அப்போது, குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்த காவல்துறை ஆணையர் உத்தரவில் ஏராளமான முரண்பாடுகள் உள்ளன. கைது செய்த தேதியை தவறாக குறிப்பிட்டுள்ளனர். ஆங்கிலத்தில் உள்ள ஆவணங்களை, தமிழில் மொழி பெயர்த்து வழங்கவில்லை என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், சதீசை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்த போலீஸ் கமிஷனர் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர்.