சென்னை: ஆளுநர் ஆர்.என்.ரவியை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் இன்று (அக்.26) ஆளுநர் மாளிகையில் சந்தித்து, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும், நேற்று (அக்.25) நடைபெற்ற சம்பவம் குறித்தும் ஆலோசனை நடத்தினார்.
சென்னைக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இன்று (அக்.26) தமிழ்நாடு வரும் குடியரசுத் தலைவர், இரவு ஆளுநர் மாளிகையில் தங்க உள்ளார். இந்நிலையில், நேற்று(அக்.25) ஆளுநர் மாளிகை முன்பு நடந்த பெட்ரோல் குண்டு வீச்சு மாநிலம் முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கருக்கா வினோத் என்பவரை பாதுகாப்பு படையினர் கைது செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு குண்டு வீச்சு நடத்தப்பட்ட இடத்தில் சோதனை நடத்தப்பட்டது.
இதையடுத்து, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் இன்று (அக்.26) சந்தித்து, குண்டு வீச்சு சம்பவம் குறித்தும் ஆளுநரின் பாதுகாப்பு குறித்தும் ஆலோசனை நடத்தினார். இந்த நேரடி சந்திப்பின் போது, பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் குறித்தும், அதைத் தொடர்ந்து காவல்துறை தரப்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆளுநரிடம் காவல் ஆணையர் விரிவாக எடுத்துக் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளன.
மேலும், இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தமிழ்நாடு வரும் குடியரசுத் தலைவர் இன்று (அக்.26) இரவு ஆளுநர் மாளிகையில் தங்கவுள்ளார். இதனால் ஆளுநர் மாளிகையில் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. குடியரசுத் தலைவருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் தமிழ்நாடு ஆளுநர் மற்றும் காவல் ஆணையர் இடையே ஆலோசனைகள் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் குடியரசுத் தலைவர் வருகையின் போது எந்த அசம்பாவிதம் ஏற்படாத வண்ணம் பாதுகாப்பு பணிகளை தீவிரப் படுத்தியுள்ளது சென்னை காவல் துறை. இந்திய விமானப்படையின் தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையத்துக்கு வரும் குடியரசுத் தலைவருக்கு தமிழ்நாடு அரசு சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர் பலத்த பாதுகாப்புடன் அங்கிருந்து ஆளுநர் மாளிகைக்குச் செல்கிறார்.
அதைத் தொடர்ந்து நாளை (அக்.27) காலை 9 மணியளவில் சில முக்கிய பிரமுகர்களை சந்திக்கவுள்ளார். பின்னர், காலை 10.15 மணி முதல் 11.15 வரை இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தில் நடைபெறவிருக்கும் எட்டாவது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார். தொடர்ந்து 11.55 மணியளவில் சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் முலம் டெல்லி செல்கிறார்.
சென்னை விமான நிலையத்தில் இருந்து ஆளுநர் மாளிகை மற்றும் நாளை பட்டமளிப்பு விழா நடைபெறும் இடம் வரை மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இந்த சந்திப்பின் போது ஆலோசனை நடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: “ஆளுநர் அதிகார அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறார்” - முத்தரசன் கண்டனம்!