சென்னை உயர் நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கந்தசாமி நாயுடு அறக்கட்டளைக்கு சொந்தமான 20 கிரவுண்ட் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் ஆக்கிரமிப்பு செய்த விவகாரத்தில் பெண் வழக்கறிஞரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை கொளத்தூர் பாலாஜி நகரை சேர்ந்த உயர் நீதிமன்ற பெண் வழக்கறிஞர் ரெஜிலா ஸ்ரீ என்பவர் கந்தசாமி நாயுடு அறக்கட்டளைக்கு சொந்தமாக கீழ்பாக்கம் கெல்லீஸ் சாலையில் உள்ள 20 கிரவுண்ட் இடத்தை போலி ஆவணங்கள் மூலம் ஆக்கிரமித்துள்ளார்.
இதுதொடர்பாக சென்னை மத்திய குற்ற பிரிவில் உள்ள நில மோசடி தடுப்பு பிரிவு வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கியது. இந்த விசாரணையில் அந்த 20 கிரவுண்ட் இடத்திற்கு அருகாமையில் தனது பெயரில் நிலம் இருப்பதாக கூறியும், அந்த நிலம் தனது பூர்வீக சொத்து என்று கூறியும், அதற்கேற்ப போலி ஆவணம் தயாரித்து கடந்த 2017ஆம் ஆண்டு ஆக்கிரமிப்பு செய்தது தெரியவந்தது.
கந்தசாமி நாயுடு அறக்கட்டளை சென்னை உயர் நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளதால், அதன் உயர் நீதிமன்ற அட்மினிஸ்ட்ரேட்டர் ஜென்ரல் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து வழக்கறிஞர் ரெஜிலா ஸ்ரீயை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். கைது செய்யப்பட்ட ரெஜிலா ஸ்ரீ ஜாமீன் கேட்டு எழும்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது
இதையும் படிங்க: தூத்துக்குடியில் கார் திருட்டு - 2 மணிநேரத்தில் மீட்ட போலீஸ்!