சென்னை: எம்.எல்.எம் மோசடி போலவே கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்ய வைத்து மோசடியில் ஈடுபட்ட தனியார் நிறுவன இயக்குனரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
![கிரிப்டோ கரன்சியில் முதலீடு என ரூ.41 லட்சம் மோசடி - சென்னையில் ஒருவர் கைது](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che02-cryptocurrencycheating-arrest-photo-script-7208368_22032023122333_2203f_1679468013_31.jpg)
சென்னையைச் சேர்ந்த பெண் தொழிலதிபர் ஒருவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரை தானும் தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களும் வடபழனியில் வி-சாஃப்ட் லிங்க் என்ற நிறுவனத்தை நடத்தி வந்த சந்திரசேகர் என்பவரிடம் Forex டிரேடிங் செய்வதற்காக பணம் முதலீடு செய்து வந்ததாகவும், முதலீடு செய்த தொகைக்கு மாதமாதம் சந்திரசேகர் மூலம் 5% முதல் 10% வரை ரிட்டர்ன்ஸ் கொடுக்கப்பட்டு வந்ததாகவும் தெரிவித்திருந்தார்.
![கிரிப்டோ கரன்சியில் முதலீடு என ரூ.41 லட்சம் மோசடி - சென்னையில் ஒருவர் கைது](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che02-cryptocurrencycheating-arrest-photo-script-7208368_22032023122333_2203f_1679468013_398.jpg)
கடந்த 2021ஆம் ஆண்டு முதல் Forex டிரேடிங்கில் இருந்து முதலீட்டினை கிரிப்டோ கரன்சிக்கு மாற்றப்போவதாக தன்னிடம் சந்திரசேகர் கூறியதாகவும், அதனடிப்படையில் தான் ரூ.22 கோடி கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்ய திட்டமிட்டு முதற்கட்டமாக அதில் 2% தொகையான ரூ.41 லட்சம் மட்டும் சந்திரசேகரன் வங்கிக் கணக்கிற்கு அனுப்பி வைத்ததாகவும் புகாரில் தெரிவித்திருந்தார்.
![கிரிப்டோ கரன்சியில் முதலீடு என ரூ.41 லட்சம் மோசடி - சென்னையில் ஒருவர் கைது](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che02-cryptocurrencycheating-arrest-photo-script-7208368_22032023122333_2203f_1679468013_1105.jpg)
ஆனால், சந்திரசேகரன் தான் அளித்த ரூ.41 லட்சம் பணத்திற்கான WT காயின் எண்களை மட்டுமே தனக்கு வழங்கியதாகவும், முதலீடு செய்ய அனுப்பிய பணத்தையோ, அதற்கான ரிட்டர்ன்ஸ் தொகையையோ தராமல் தன்னை ஏமாற்றி மோசடி செய்துவிட்டதாகவும் குறிப்பிட்டு, அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்கும்படி அந்த புகாரில் தெரிவித்திருந்தார்.
![கிரிப்டோ கரன்சியில் முதலீடு என ரூ.41 லட்சம் மோசடி - சென்னையில் ஒருவர் கைது](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che02-cryptocurrencycheating-arrest-photo-script-7208368_22032023122333_2203f_1679468013_66.jpg)
Wohlstand Token-ல் முதலீடு என மோசடி: இந்தப் புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், சந்திரசேகரன் Wohlstand Token என்ற பெயரில் உள்ள கிரிப்டோ கரன்சியை, இணையதளம் ஒன்றை துவங்கி மற்ற முதலீட்டு இணையதளங்களிலும் தனது இணையதளத்தின் லிங்க்-ஐயும் பகிர்ந்து, அதன் மூலமாக சிறிய முதலீட்டாளர்கள் முதல் பெரிய முதலீட்டாளர்கள் வரை பலரிடம் இருந்து Wohlstand Token எனப்படும் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்து லாபம் ஈட்டலாம் என பலரிடம் இருந்தும் கோடிக்கணக்கில் பணம் மோசடி செய்துள்ளது தெரியவந்தது.
அதனடிப்படையில் வி-சாஃப்ட் லிங்க் நிறுவனத்தின் இயக்குநர்களுள் ஒருவரான சந்திரசேகரன் என்பவரை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் Wohlstand Token எனப்படும் கிரிப்டோ கரன்சியின் விலை முன்பு உச்சத்தில் இருந்ததாகவும், ஆனால் தற்போது அதன் மதிப்பு வெகுவாக சரிந்துவிட்டதால் முதலீடு செய்த பணம் அனைத்தும் நஷ்டம் அடைந்துவிட்டதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.
Wohlstand token எனப்படும் கிரிப்டோ கரன்சியின் மதிப்பு குறைந்தது தெரிந்தும், அதை மறைத்து தனது நிறுவனத்தைச் சேர்ந்த சக இயக்குநர்கள் தன்னை ஏமாற்றி பலரிடம் இருந்து முதலீட்டைப் பெற வைத்து மோசடி செய்துவிட்டதாகவும் குற்றம்சாட்டி சந்திரசேகரன் வாக்குமூலம் அளித்துள்ளார். இதனைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட சந்திரசேகரனை, சைபர் கிரைம் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி இன்று (மார்ச்.22) சிறையில் அடைத்தனர். மேலும், இந்த மோசடியில் தொடர்புடைய மற்ற நபர்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக சைபர் கிரைம் போலீசார் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆன்லைன் கோல்டு டிரேடிங் மோசடி: ஐடி ஊழியரிடம் ரூ.5 லட்சம் அபேஸ்!